இந்தியா

மாறன் சகோதரர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தடையில்லை: அட்டர்னி ஜெனரல்

செய்திப்பிரிவு

ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்தத்தில் முறைகேடு செய்தது தொடர்பாக முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சர் தயாநிதி மாறன் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போதிய ஆதாரம் இருப்பதாக அட்டர்னி ஜெனரல் முகுல் ரஸ்தோகி தெரிவித்துள்ளார்.

ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்தத்தில் தயாநிதி மாறன் முறைகேடுகளில் ஈடுபட்டது தொடர்பாக போதிய ஆதாரம் இருக்கிறது என ரஸ்தோகி முடிவுக்கு வந்துள்ளார்.

மேலும், இவ்விவகாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது தொடர்பாக சிபிஐ தரப்பு விசாரணை இயக்குநரின் கருத்துடன் அட்டர்னி ஜெனரல் முகுல் ரஸ்தோகி ஒத்துப்போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வழக்கை விசாரித்து வந்த சிபிஐ விசாரணை அதிகாரி, ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் முன்னால் அமைச்சர் தயாநிதி மாறனுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யலாம் என தெரிவித்தார். இதனையடுத்து அட்டர்னி ஜெனரலிடம் சிபிஐ கருத்து கேட்டுள்ளது. ஆனால், சிபிஐ இயக்குநர் ரஞ்சித் குமார், மாறனுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் விவகாரத்தில் மாற்றுக் கருத்து கொண்டுள்ளார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம், உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்த சிபிஐ ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்தம் தொடர்பாக வெளிநாட்டில் விசாரணை நடத்தத் தேவையில்லை. ஏனென்றால், ஏர்செல் நிறுவனத்தை அதன் முதல் உரிமையாளர் சிவசங்கரனிடம் இருந்து டி.அனந்தகிருஷ்ணன் வாங்கியதில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என மலேசிய அரசு தெரிவித்துவிட்டது என குறிப்பிட்டிருந்தது.

ஏர்செல் நிறுவனத்தை மலேசிய தொழிலதிபர் அனந்தகிருஷ்ணனிடம் விற்பனை செய்யுமாறு சிவசங்கரனை தயாநிதி மாறன் நிர்பந்தப்படுத்தினாரா என்பது குறித்து சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது.

SCROLL FOR NEXT