கோழி முட்டை தொடர்பான விவகாரத்தால் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்தினர் நீதி கேட்டு, மனித உரிமை ஆணையத்தை நாடியுள்ளனர்.
ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம், முதுகுப்பா மண்டலத்துக்குட்பட்ட நாகரெட்டிபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ரமணா. இவரது வீட்டுக் கோழி, எதிர் வீட்டிற்குச் சென்று முட்டையிடுமாம். அந்த முட்டையை எதிர்வீட்டாரே சமைத்து சாப்பிட்டு விடுவார்களாம்.
முட்டை மாயமாகப் போவதால் ஆத்திரமுற்ற ரமணா வின் மனைவி ரமணம்மா, முட்டை திருடுபவர்களை மறைமுகமாக திட்டி இருக்கிறார். இதனால் எதிர்வீட்டார் ரமணம்மாவை அடித்து உதைத்துள்ளனர். இது ஜாதி பிரச்சினையாகி ஊர் விவகாரமாக வளர்ந்துள்ளது.
கோழிக்கு உரிமையாளரான ரமணம்மா, முட்டை திருட்டு பற்றி முதிகுப்பா போலீஸில் புகார் செய்தார். அப்போதும் எதிர்வீட்டார், போலீஸில் புகார் செய்கிறாயா என்று கேட்டு மீண்டும் ரமணம்மா குடும்பத்தாரை தாக்கி உள்ளனர். அதையடுத்து, போலீஸார் இரு குடும்பத்தார் மீதும் வழக்குப் பதிவு செய்தனர்.
ஆனால், ரமணம்மா குடும்பத்தினர் மீது மட்டும் 307 வது சட்டப்பிரிவின்கீழ் (கொலை முயற்சி) ஜாமீனில் வெளியே வர முடியாத வகையில் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
கோழி முட்டையையும் திருடிவிட்டு, தங்கள் மீதே கொலை முயற்சி குற்றம் சாட்டுவதா என ரமணம்மா குடும்பத்தினர் புதன்கிழமை ஹைதராபாதில் உள்ள மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்துள்ளனர்.