காவலருக்கான தேர்வுகள் அனைத்திலும் தேர்ச்சி பெற்றிருந்தும் பாலினம் காரணமாக பணி மறுக்கப்பட்ட கங்கா குமாரி என்னும் 24 வயது திருநங்கைக்கு வேலை வழங்க ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜலோர் மாவட்டம் ஜகாரி கிராமத்தைச் சேர்ந்தவர் கங்கா குமாரி. தன்னுடைய கல்லூரிப் படிப்பை முடித்த அவர், காவலர் பணிக்கான எழுத்துத் தேர்விலும் உடல் பரிசோதனையிலும் வெற்றி பெற்றார். இதைத் தொடர்ந்து மாநிலத்திலேயே போலீஸ் பணிக்கான தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற முதல் திருநங்கை என்ற பெயரைப் பெற்றார்.
கங்கா குமாரி, 2015-ம் ஆண்டே போலீஸ் பணிக்கான அனைத்து தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்ற போதிலும் மருத்துவப் பரிசோதனையில் அவரின் பாலினம் குறித்துத் தெரியவந்தது. இதனால் அவருக்கு காவலர் பணி மறுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நீதிமன்றத்தை நாடினார் கங்கா.
இதுகுறித்து விசாரித்துத் தீர்ப்பளித்துள்ள அம்மாநில உயர் நீதிமன்ற நீதிபதி தினேஷ் மேத்தா, ''எந்தவொரு குடிமகனுக்கும் பாலினத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்டக்கூடாது. கங்கா குமாரிக்கு 6 வார காலத்துக்குள் பணி நியமனம் வழங்கப்பட வேண்டும்.
கங்கா குமாரிக்கு பணி நியமனம் அளிக்க மறுக்கப்பட்டதை, பாலின பாகுபாட்டின் உதாரணமாக நீதிமன்றம் கருதுகிறது.
இதனால் கங்காவின் நியமனம், 2015-ல் இருந்து அவருக்கு பணிமூப்பு மற்றும் இதர பலன்கள் கிடைக்கும் வகையில் அளிக்கப்பட வேண்டும்'' என்று உத்தரவிட்டுள்ளார்.