பிஹார் மாநிலம் சிதாமர்ஹி மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு நடுநிலைப் பள்ளியில் சனிக்கிழமை மதிய உணவு சாப்பிட்ட 54 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து வட்டார வளர்ச்சி அதிகாரி வினோத் குமார் கூறியதாவது:
சுர்சந்த் நகருக்கு அருகே உள்ள மெக்பூர் கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் சிலருக்கு மதிய உணவு சாப்பிட்ட பிறகு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் அருகில் உள்ள பொது சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப் பட்டுள்ளனர். இவர்களில் யாரும் ஆபத்தான நிலையில் இல்லை.
இந்த மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிய உணவை கைப்பற்றி ஆய்வு செய்ததில், அதில் ஒரு பெரிய மர்ம பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அது பாம்பாக இருக்கக் கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. எனவே, உணவு மாதிரியை ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கடந்த ஓராண்டுக்கு முன்பு பிஹார் மாநிலம் சரண் மாவட்டத்தைச் சேர்ந்த தர்மசதி கந்தமன் கிராமத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 23 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.