இந்த வாரம், தேசிய குற்ற ஆவணங்கள் செயலகம் (National Crime Records Bureau-NCRB) ஒரு தகவல் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தியாவின் மிக முக்கியப் பிரச்சினையைக் குறிக்கும் அத்தகவலுக்கு எந்த முக்கியத்துவமும் தரப்படவில்லை. ஏனோ அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தகவல் யாருடைய கவனத்தையும் ஈர்க்கவில்லை. ஒருவேளை, வடஇந்தியாவைப் பொருத்தவரையில் கடந்த சில ஆண்டுகளாகவே அதனுடைய எண்ணிக்கை பத்தாயிரத்தில் இருப்பதானாலோ என்னவோ யாரும் பெரிதாக பொருட்படுத்தவில்லை. இதுதான் இந்த தகவல் - இந்த ஆண்டில் 11,772 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்.
இந்திய வேளாண்மைத் துறையின் செயற்பாடுகளைக் கூர்ந்து கவனித்தவர்களுக்கு, இது எதிர்பார்த்த செய்தியாகவே இருக்கும். விவசாயத்திலிருக்கும் அடிப்படை பிரச்சினைகள் தீர்க்கப்படும் வரை, இந்த எண்ணிக்கையில் குறைவு இருக்காது.
விவசாயச் சமூகத்தினர் வறுமையில் வாடுவதோ, அதற்கான காரணங்களோ நமக்கு புதிதுமல்ல அதிர்ச்சியூட்டக்கூடியதுமல்ல . அவர்களது விவசாய நிலங்களுக்கு கொஞ்சமும் பொருத்தமில்லாத பயிர்களைப் பரிந்துரைப்பதும், நிரந்தர கடனாளிகள் ஆக்குவதும்தான் அவர்களின் உழைப்பிற்கு நாம் தொடர்ந்து கொடுத்துக்கொண்டிருக்கும் ‘பரிசு’கள். கிராமத்தில் வறுமையில் வாழும் அவர்கள், தமக்குரிய தொழிலாளர்களை தேர்ந்தேடுக்கும் நிலையில் இல்லை. அவர்களுக்கு அறுவடைக்குபின் செய்யவேண்டிய வழிமுறைகள் வகுத்துக்கொடுக்கவில்லை. அவர்களின் கடும் உழைப்பில் விளைவித்த பொருட்களை, நியாயமாக தகுந்தமுறையில் சந்தைக்கு அனுப்பவும் வழி செய்து தந்தபாடில்லை.
இத்தகைய சிக்கல்களுக்கு தீர்வு காணமுடியாதபட்சத்தில், விவசாயிகளின் வாழ்வில் பெரிய மாற்றம் எதுவும் நிகழப்போவதில்லை.
கடந்த 2012-ஆம் ஆண்டு நிகழ்ந்த 12,000 தற்கொலைகளில் பாதி அளவு, பஞ்சு உற்பத்திக்கு பெயர்போன மகாராஷ்ட்ரா, ஆந்திரம், கர்நாடகா, மத்திய பிரதேசம் ஆகிய நான்கு மாநிலங்களில் ஏற்பட்டவை. தற்போது வெளியான 2013-ஆம் ஆண்டின் தகவல் அறிக்கை, இதனைவிடவும் குறைவு என்றாலும், விவசாயிகளின் பிரச்சினையை முக்கியமாக அணுக தவற விட்டுவிட்டோம்.
இதுகுறித்து அனைத்திந்திய விவசாயிகள் சங்கம் (All-India Kisan Sabha) இணைச் செயலர் விஜோ கிருஷ்ணன் கூறுகையில், “மத்திய அரசு நிர்ணயக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை (minimum support prices- MSPs) மிக மிகக் குறைவாக உள்ளது. உதாரணமாக, குசம்பப்பூவை (Safflower) எடுத்துக்கொள்வோம். சந்தையில் விற்கப்படும் விலையை விடவும் மிகக் குறைவாக விலை நிர்ணயிக்கப்படுகிறது. வேளாண்மையில் விவசாயிகளின் ஆர்வத்தையும் ஈடுப்பாட்டையும் தக்கவைத்துக்கொள்ளவேண்டும் எனில், நியாயமான விலையை நிர்ணயிக்ககூடிய நல்ல கொள்முதல் கொள்கைகளை கடைப்பிடிக்கவேண்டும்”, என்று தெரிவித்தார்.
பொருத்தமில்லாத நிலங்களில் பஞ்சு உற்பத்தி செய்வதானாலும், அதனால் ஏற்படும் பாதிப்புகளாலும், இதில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்று கூறுகிறார், வேளாண்மை பொருளாதார ஆய்வாளர் கே.ஆர்.சவுத்ரி.
மேலும், இத்தகைய பிரச்சினைகளில் விரைவில் கவனம் செலுத்தாவிடில், அதற்கான விலையை நாம் கொடுக்கவேண்டியிருக்கும் என்றும் எச்சரிக்கிறார், அவர்.