மரபணு மாற்றப்பட்ட பயிர்களை பயிரிட்டு சோதனையிட தடை விதிக்க மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஒப்புக்கொண்டதாக ஆர்.எஸ்.எஸ் இயக்கத்துடன் தொடர்புடைய அமைப்புகள் தெரிவித்துள்ளன. ஆனால், இது தொடர்பாக இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்று பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.
ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துடன் தொடர்புடைய சுதேசி ஜாக்ரன் மன்ச், பாரதிய கிசான் சங்கம் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள், மத்திய சுற்றுச் சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை செவ்வாய்க்கிழமை சந்தித்தனர். மரபணு மாற்றப்பட்ட நெல், கத்தரிக்காய், பருத்தி உள்ளிட்ட பயிர்களை வயல்வெளிகளில் வளர்த்து சோதனையிட, மரபணு மாற்றப் பயிர் ஒப்புதல் குழு சார்பில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அந்த குழுவினர், “எங்களின் கோரிக்கையை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஏற்றுக்கொண்டார். வயல்வெளிகளில் மரபணு மாற்றப்பட்ட பயிர்களை பயிரிட்டு சோதனை செய்யும் நடவடிக்கையை நிறுத்திவைக்க அவர் முடிவு செய்துள்ளார்” என்றனர். இதையடுத்து பிரகாஷ் ஜவடேகரை செய்தியாளர்கள் தொடர்பு கொண்டபோது, “இது தொடர்பாக எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை. அவசர கதியில் எந்தவொரு தீர்மானத் திற்கும் வரமாட்டோம்” என்று தெரிவித்தார்.