கோப்புப்படம் 
இந்தியா

ஏழுமலையான் கோயிலில் 2 பிரம்மோற்சவ விழாக்கள் ஏற்பாடு

என்.மகேஷ்குமார்

திருமலை: இந்த ஆண்டு செப்டம்பர் மற்றும் அக்டோபர் ஆகிய இரண்டு மாதங்களில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2 பிரம்மோற்சவ விழாக்கள் நடத்தப்பட உள்ளன.

இதற்கான ஏற்பாடுகள் குறித்து திருமலையில் உள்ள அன்னமைய்யா பவனில், தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி தலைமையில் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது.

அதன் பின்னர் தர்மா ரெட்டி பேசியதாவது. இந்த ஆண்டு புரட்டாசி மாதம் செப்டம்பர் 18-ம் தேதி முதல் அக்டோபர் 17-ம் தேதி வரை உள்ளது. இதில் வருடாந்திர பிரம்மோற்சவம், செப்டம்பர் 18-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை 9 நாட்கள் நடக்கவிருக்கிறது. நவராத்திரி பிரம்மோற்சவம், அக்டோபர் மாதம் 15-ம்தேதி முதல் 23-ம் தேதி வரை நடக்க உள்ளது.

புரட்டாசி சனிக்கிழமைகள் செப்டம்பர் 23, 30 மற்றும் அக்டோபர் 7,14 ஆகிய தேதிகளில் வருகின்றன. ஆதலால் 2 பிரம்மோற்சவ விழாக்கள் மற்றும் புரட்டாசி மாத பக்தர்களின் கூட்டம் ஆகியவற்றை எவ்வித சிறு சங்கடங்களும் நடைபெறாதவாறு நடத்த திட்டம் தீட்டி வருகிறோம். இவ்வாறு தர்மாரெட்டி தெரிவித்தார்.

கோயில் குளம் மூடப்பட்டது: ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் நெருங்குவதால், புஷ்கரணியில் (குளம்) வழக்கமாக நடத்தப்பட உள்ள சக்கர ஸ்நான நிகழ்ச்சிகளில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் புனித நீராடுவார்கள். இதற்காக கோயில் குளம் முழுவதும் மராமத்து பணிகளுக்காக ஆகஸ்ட் 31-ம் தேதி வரை மூடப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. ஆதலால், வழக்கமாக செய்யப்படும் புஷ்கரணி ஆரத்தியும் இந்த ஒரு மாதம் ரத்து செய்யப்பட உள்ளது.

2 பவுர்ணமி கருட சேவை: திருமலை திருப்பதி தேவஸ்தானத்தினர், பக்தர்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்த்து, கடந்த சில ஆண்டுகளாக பவுர்ணமி அன்றுஇரவு, கருட வாகன சேவையை நடத்துகின்றனர். சந்திரனுக்குரிய திருத்தலம் என்பதால் தான், ஒவ்வொரு பிரம்மோற்சவத்தின் போது, முத்து பல்லக்கு வாகனத்திலும், சந்திரபிரபை வாகனத்திலும் மலையப்பர் எழுந்தருளுகிறார் என்பதும் குறிப்பிட தக்கது.

இந்த பிரசித்தி பெற்ற பவுர்ணமி கருட சேவை இன்று இரவும், அடுத்ததாக, வரும் 31-ம் தேதி பவுர்ணமி அன்று இரவும் கடைபிடிக்கப்பட உள்ளது.

SCROLL FOR NEXT