இடுக்கி: கேரளாவில் மனைவியின் தொல்லைக்கு பயந்து மாயமான கணவரை போலீஸார் தீவிர தேடுதலுக்குப் பின் கண்டறிந்துள்ளனர். இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் கூறியது:
பத்தனம்திட்டா மாவட்டத்தின் களஞ்சூர் பகுதியைச் சேர்ந்தவர் நவ்ஷாத் (34). இவரது மனைவி அப்சனா (25). இவர்கள் வாடகை வீட்டில் தங்கியிருந்தபோது கடந்த 2021 நவம்பர் முதல் திடீரென நவ்ஷாத் காணாமல் போனார். இவரது தந்தை அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தேடிவந்தனர்.
நவ்ஷாத்தின் மனைவி அப்சனாவிடம் விசாரணை நடத்தியபோது அவரை கொலை செய்து புதைத்துவிட்டதாக கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரின் உடலை தேடிவந்த நிலையில், தொடுபுழா அருகே உள்ள ஒரு கிராமத்தில் நவ்ஷாத் உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் அங்குள்ள பண்ணையொன்றில் கூலி வேலை செய்து வந்துள்ளார்.
அவரிடம் நடத்திய விசாரணையில், மனைவி தன்னிடம் தினமும் சண்டையிட்டு வந்ததாகவும், இதனால் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் நவ்ஷாத் தெரிவித்தார்.
மேலும், அப்சனாவின் உறவினர்கள் தினமும் அடித்து உதைத்ததால் உயிருக்கு பயந்து வீட்டை விட்டு வெளியேறி கண்காணாத இடத்தில் வேலை செய்து வந்ததாக விசாரணையின்போது நவ்ஷாத் கூறினார். இந்த நிலையில்தான் தொம்மன்குத்து போலீஸார் தற்போது அவரை உயிருடன் கண்டுபிடித்துள்ளனர். கணவர் குறித்து தவறான தகவல் அளித்த அப்சனா கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.