இந்தியா

ராஜஸ்தானில் முஸ்லிம் நபர் சுட்டுக்கொலை: பசுக்களை ஏற்றிச் சென்ற போது விபரீதம்

மொகமது இக்பால்

ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டத்தில் பசுக்களைக் கொண்டு சென்ற முஸ்லிம் நபர் ஒருவரை பசுப்பாதுகாவலர்கள் சுட்டுக் கொன்றதாக சந்தேகிக்கப்படுகிறது, இவருடன் சென்ற மற்றொரு நபர் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தார்.

இதே ஆண்டு ஏப்ரலில்தான் ஹரியாணா கால்நடை வளர்ப்பு விவசாயி பெலு கான் கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் உமர்கான் என்ற இந்த முஸ்லிம் நபரை சுட்டுக் கொன்று உடலை ரயில்வே டிராக்கில் வீசி விட்டுச் சென்றுள்ளனர். அதாவது ரயில் விபத்தில் இறந்ததாக ருசு உருவாக்க இவ்வாறு செய்யப்பட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

கடந்த வெள்ளியன்று உமர்கான் இவரது உதவியாளர் தாஹிர் கான் சிறிய ட்ரக் ஒன்றில் 4 பசுக்களை ஏற்றிக்கொண்டு ஆல்வாரிலிருந்து காத்மிகா கிராமத்துக்கு கொண்டு சென்று கொண்டிருந்தனர். அப்போது நடுவழியில், கோவிந்த்கர் பகுதியில் கும்பல் ஒன்று இவர்களை வழிமறித்து. துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் உமர் கான் மரணமடைந்தார், உதவியாளர் தாஹிர் கான் காயமடைந்தார்.

இதனையடுத்து உமர் கான் உடலை ரயில்வே டிராக்கில் வீசிவிட்டுச் சென்றதாக புகார் எழுந்துள்ளது. போலீஸார் உடலைக் கைப்பற்றி ராஜீவ் காந்தி நினைவு மருத்துவமனைக்குக் கொண்டு வந்தனர். ஆனால் ரயிலில் வேறு அடிபட்டு உடல் சேதமடைந்திருந்தது.

இவர்கள் இருவரும் மியோ முஸ்லிம் பிரிவைச் சேர்ந்தவர்கள். இந்தப்பிரிவு முஸ்லிம்கள் ராஜஸ்தான், ஹரியாணா, உ.பி.மாநில சில பகுதிகளில் பரவலாக வாழ்ந்து வருகின்றனர். உமர் கான் உடலை வாங்க மறுத்து மியோ முஸ்லிம் இனத்தவர் போராடி வருகின்றனர், உமர் கான் உடல் அரசு மருத்துவமனையில்தான் உள்ளது.

இதனால் இப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

SCROLL FOR NEXT