கர்நாடக மாநிலம் பெல்காமில் கன்னட அமைப்புகளுக்கும் மராத்திய அமைப்புகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள கலவரத்தால் அங்கு பெரும் பதற்றம் நீடிக்கிறது. இதனால் நிபாளி,ஹெல்லூர்,கனாப்புரா ஆகிய பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு இரண்டாவது நாளாக திங்கள்கிழமையும் தொடர்ந்தது.
இதனிடையே கர்நாடக எல்லையில் மராட்டியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் 'திட்டமிட்ட கன்னட பயங்கரவாதம்' என சிவசேனா கூறியுள்ளதால் பெல்காமில் உள்ள மராட்டிய அமைப்புகள் தொடர் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளன. இருமாநில பிரச்சினையில் உடனடியாக மத்திய அரசு தலையிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
பெல்காம் யாருக்கு சொந்தம்?
கர்நாடகா,மஹாராஷ்டிரா இரு மாநில எல்லையில் அமைந்துள்ளது பெல்காம் மாவட்டம். இங்கு பெல் காம்,நிபாளி,ஹெல்லூர்,கனாப்புரா உள்ளிட்ட பல பகுதிகளில் மராட்டியர்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். 1956-ல் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டதில் இருந்து,'பெல்காம் யாருக்கு சொந்தம்?' என்பதில் இரு மாநிலங்களுக்கு இடையே பெரும் போட்டி நிலவி வருகிறது.
மராட்டியர்கள் அதிகமாக வாழும் பெல்காம் மாவட்டத்தை மகாராஷ்டிராவுடன் இணைக்க வேண்டும் என்று அங்குள்ள மராட்டிய அமைப்புகளும் மஹாராஷ்டிராவில் உள்ள சிவசேனா அமைப்புகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன. ஆண்டுதோறும் நவம்பர் 1-ம் தேதியை கர்நாடகா உதயமான தினமாக மாநிலம் முழுவதும் கொண்டாடப்பட்டாலும் பெல்காமில் மட்டும் கருப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது.
“மராட்டிய அமைப்புகளின் கோரிக்கையையும ்போராட்டங்களையும் ஒடுக்கும் விதமாக கர்நாடக அரசு செயல்படுகிறது. மராட்டிய அமைப்புகளுக்கு போட்டியாக கன்னட அமைப்புகள் பெல்காமில் போராட்டத்தில் ஈடுபடுவதால் பல நேரங்களில் கலவரம் ஏற்பட காரணமாகிறது. பெல்காமை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே கர்நாடக அரசு அங்கு ஒரு சட்டமன்ற கட்டிடத்தை 3 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டி ஆண்டுக்கொரு முறை அங்கு சட்டப்பேரவை கூட்டத் தொடரையும் நடத்தி வருகிறது” என்று மராட்டிய அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.
மராட்டிய மாநிலம்
இந்நிலையில் பெல்காம் மாவட்டம் ஹெல்லூர் பகுதியில் 'மஹாராஷ்டிரா மாநிலம்' என வைக்கப்பட்டிருந்த அறிவிப்பு பலகையை அகற்ற கர்நாடக உயர் நீதிமன்றம் கடந்த 25-ம் தேதி உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து மாவட்ட அதிகாரிகள் அப்பலகையை அகற்றினர். இதனை கண்டித்து கர்நாடக அரசு பஸ்களை சிவசேனா தொண்டர்கள் தாக்கினர்.
மேலும் 27-ம் தேதி அதிகாலையில் அதே இடத்தில் 'மஹாராஷ்டிரா மாநிலம்' என்ற அறிவிப்பு பலகையை 'மராட்டிய எகிகரன் சமிதி' (எம்.இ.எஸ்.) என்ற கட்சினர் வைத்தனர். அந்தப் பலகை போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்பட்டது. அப்போது அங்கு குழுமி இருந்த கன்னட அமைப்புகளை சேர்ந்தவர்கள் மராட்டியர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் பத்திரிகையாளர்கள் உட்பட பலர் தாக்கப்பட்டனர். கூட்டத்தைக் கலைக்க போலீஸார் தடியடி நடத்தியதில் பலர் காயமடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து பெல்காம் மாவட்ட எல்லை பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இரு மாநில எல்லையில் இப்போது பதற்றமான சூழ்நிலை நீடிக்கிறது.
கன்னட பயங்கரவாதம்
இந்நிலையில் சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ நாளேடான சாம்னாவில், 'மும்பையில் கர்நாடகா பவன்,கன்னட சங்கம் என பல கட்டிடங்கள் இருக்கின்றன. நாங்கள் பொறுத்துக்கொள்கிறோம். கர்நாடகாவில் 'மஹாராஷ்டிரா மாநிலம்' என்ற அறிவிப்பு பலகையைகூட பொறுக்க முடியாமல் தாக்குதல் நடத்தியுள்ளனர். இது திட்டமிட்ட கன்னட பயங்கரவாதம். இதனை ஒடுக்க வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உள்ளது' என குறிப்பிட்டுள்ளது. இதனால் மஹாராஷ்டிராவில் உள்ள மராட்டிய அமைப்புகளும் பெல்காமில் உள்ள மராட்டிய அமைப்புகளும் 'இனி கன்னட கொடியை ஏற்றவிட மாட்டோம்.கர்நாடக மாநிலம் உதயமான தினத்தை கொண்டாட விடமாட்டோம்' என அறிவித்துள்ளன. எனவே இரு மாநில எல்லையில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியபோது, 'பெல்காமில் மராத்தியர்களுக்கு எவ்வித கொடுமையும் நடக்கவில்லை. மராட்டிய அமைப்புகள் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து நடக்க வேண்டும்' என்றார்.