குடியரசுத் தலைவராக பதவியேற்று 2 ஆண்டுகள் நிறைவு செய்தார் பிரணாப் முகர்ஜி. இதையொட்டி குடியரசுத் தலைவர் மாளிகையில் அருங்காட்சியகம் ஒன்றை அவர் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.
நாட்டின் 13-வது குடியரசுத் தலைவராக பிரணாப் முகர்ஜி கடந்த 2012-ம் ஆண்டு ஜூலை 25-ம் தேதி பதவியேற்றார். அவர் பதவியேற்று 2 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி குடியரசுத் தலைவர் மாளிகையில் வெள்ளிக்கிழமை பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தன.
இதையொட்டி, மக்களுடன் நெருக்கத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஒன்றாக குடியரசுத் தலைவர் மாளிகையில் அருங்காட்சியகத்தை பிரணாப் முகர்ஜி திறந்து வைத்தார்.
பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். விழாவில் பிரணாப் முகர்ஜி பேசும்போது, “இந்த அருங் காட்சியகம் மூலம் குடியரசுத் தலைவர் மாளிகையின் உட்புற பகுதிகளையும் அதன் கட்டிடக் கலை அழகையும் நாட்டு மக்கள் பார்த்து ரசிக்க முடியும்” என்றார்.
முன்னாள் குடியரசுத் தலை வர்களின் பைபர் கிளாஸ் சிலைகள், அவர்கள் பரிசாகப் பெற்ற கலைப் பொருள்கள், ஓவியங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
மேலும் அழகிய வேலைப் பாடுகள் மிகுந்த மரச்சாமான்கள், அரிய புகைப்படங்களும் உள்ளன. குடியரசுத் தலைவர் மாளிகை வரலாறு தொடர்பான ஒலி-ஒளி காட்சி, லேசர் காட்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த அருங்காட்சியகம் ஆகஸ்ட் 1 முதல் பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்படும். வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் இதனை பொதுமக்கள் பார்க்கலாம்.
3 மாதங்களுக்கு கட்டண மின்றியும் அதன் பிறகு சிறிய கட்டணத்துடனும் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவர். ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் வசதியும் ஏற்படுத்தப்படும்.