இந்தியா

மும்பையில் ஆக.25, 26-ல் ‘இண்டியா’ கூட்டணி கூட்டம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: எதிர்க்கட்சிகள் தங்களின் ‘இண்டியா' கூட்டணியின் அடுத்த கூட்டத்தை ஆகஸ்ட் 25, 26 ஆகியதேதிகளில் மும்பையில் நடத்த உள்ளதாக எதிர்க்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

வரும் மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக கூட்டணியை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து ‘இண்டியா’ என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ளன. இந்த அணியின் முதல் கூட்டம் ஜூன் 23-ம் தேதி பிஹார் மாநில தலைநகர் பாட்னாவில் நடைபெற்றது. பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் இக்கூட்டத்தை நடத்தியது.

இதையடுத்து 2-வது கூட்டத்தை கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த 17, 18 ஆகிய தேதிகளில் காங்கிரஸ் கட்சி நடத்தியது.

இந்நிலையில் 3-வது கூட்டம் மும்பையில் ஆகஸ்ட் 25, 26 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. சிவசேனா (உத்தவ் தாக்கரே) மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சரத் பவார் பிரிவு ஆகியவை காங்கிரஸ் ஆதரவுடன் இக்கூட்டத்தை நடத்துகின்றன. கூட்டணியின் 26 கட்சிகள் இதில் பங்கேற்கின்றன.

இண்டியா அணியின் எந்தவொரு கட்சியும் ஆட்சியில் இல்லாத ஒரு மாநிலத்தில் இக்கட்சிகளின் கூட்டம் நடைபெறுவது இதுவே முதல்முறையாகும்.

மும்பையில் நடைபெற உள்ள கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT