புதுடெல்லி: சிஆர்பிஎப் நிறுவன தினத்தையொட்டி அந்த படை வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கடந்த 1939-ம் ஆண்டு ஜூலை 27-ம் தேதி சிஆர்பிஎப் படை உருவாக்கப்பட்டது. இந்த படை தற்போது மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. சுமார் 3.13 லட்சம் வீரர்கள் படையில் பணியாற்றி வருகின்றனர். கலவர தடுப்பு, தீவிரவாத தடுப்பு, முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பணியில் சிஆர்பிஎப் வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
இந்த சூழலில் சிஆர்பிஎப் நிறுவன தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: வீர, தீரமிக்க அனைத்து சிஆர்பிஎப் வீரர்களுக்கும் படையின் நிறுவன தினத்தில் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். உங்களது துணிச்சல், அர்ப்பணிப்பு மற்றும் தன்னலமற்ற சேவையை நமது தேசம் பாராட்டுகிறது. நாட்டின் பாதுகாப்புக்காக நீங்கள் ஆற்றும் சேவை போற்றத்தக்கது. இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.