இந்தியா

பயணிகளுக்கு கூடுதல் வசதி புறநகர் மின் ரயில்களில் தானியங்கி கதவு: ஜூலை 8 ரயில்வே பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் வெளியாகும்

செய்திப்பிரிவு

புறநகர் மின் ரயில்களில் தானியங்கி கதவுகள் அமைக்கப்பட உள்ளன. மேலும் பயணிகளுக்கு கூடுதல் வசதி செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும். வரும் 8ம் தேதி தாக்கல் செய்யப்படும் ரயில் பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்புகள் வெளியாகும்.

நரேந்திர மோடி தலைமை யிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் முதல் பட்ஜெட்டை ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா தாக்கல் செய்ய உள்ளார்.

பயணிகளின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தரும் வகையில் அறிவிப்புகள் இதில் இடம் பெறும்.

சதாப்தி ரயில்களில் தானியங்கி கதவுகள், பயணிகள் பெட்டிகளில் தீத்தடுப்பு வசதி ஆகியவை 2014-15-ம் ஆண்டுக்கான ரயில் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட உள்ள சில திட்டங்கள். இந்த தகவலை அதிகார வட்டாரங்கள் தெரி வித்தன.

ரயில்களில் தூய்மைக்கு முக்கியத்துவம் தரும் வகையில் சோதனை திட்டமாக பெங்களூர் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தக் கூடிய பாலியஸ்டர் படுக்கை விரிப்பு வழங்கும் திட்டத்தை அமல்படுத்த ரயில்வே திட்டமிட்டுள்ளது.

தற்போது, ராஜ்தானி ரயில் களில் வழங்கப்படும் படுக்கை விரிப்புகள் தரமில்லாதவை என புகார் வருவதால் இந்த திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டம் வெற்றி தந்தால் பிற ராஜ்தானி ரயில்களிலும் விரிவு படுத்தப்படும்.

சதாப்தி ரயில் பெட்டிகளில் தானி யங்கி கதவு அமைக்கும் திட்டம் சோதனை அடிப்படையில் தொடங்கப்படும். புற நகர் மின் ரயில்களிலும் தானியங்கி கதவு வசதி அமைக்கப்படும்.

அதிக கொள்ளளவு பால் வேன்கள்

நாட்டில் பால் பொருள்களுக் கான தேவை அதிகரித்துள்ளதால் அதன் போக்குவரத்துக்காக 44600 லிட்டர் கொள்ளளவு கொண்ட பால் வேன் தயாரிக்கவும் ரயில்வே திட்டமிட்டுள்ளது. தற்போது 40000 லிட்டர் கொள்ளளவு பால் வேன்கள் பயன்பாட்டில் உள்ளன.

இந்த வேன்களின் கொள்ளளவு அதிகரித்தாலும் அவற்றின் எடை 37 டன்களிலிருந்து 29.7 டன்னாக குறையும் வகையில் வடிவமைப்பு செய்யப்படும்.

அதே போல், உப்பு போக்குவரத் துக்கு லேசான எடைகொண்ட வேகன் தயாரிப்பது பற்றியும் பட்ஜெட்டில் அறிவிப்பு இடம் பெறும். உற்பத்தித் துறையினரின் கோரிக்கைக்கு செவிசாய்த்து, உருக்கு இரும்புத் தகடு சுருள்கள் போக்குவரத்துக்காக அதிக சுமை தாங்கும் வேகன் தயாரிப்பது பற்றியும் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும்.

தற்போது 2346 டன் உருக்கு இரும்புத் தகடு சுருள்களை (ஸ்டீல் காயில்) சுமந்து செல்லும் வேகன்கள் உள்ளன. புதிய திட்டத்தின்படி 3944 டன் எடை வரை சுமக்கக் கூடிய வேகன்களை ரயில்வே தயாரிக்கும்.

பார்சல் போக்குவரத்தின் மூலமான வருவாயை அதிகரிக்கும் நோக்கில் அதிக சுமை பார்சல் வேன்களை தயாரிக்கும் திட்டம் பற்றியும் இந்த பட்ஜெட்டில் அறி விப்பு வெளியாகும் என எதிர் பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT