பெங்களூரு: கடந்த ஆண்டு பெங்களூருவில் கட்டப்பட்டு வந்த மெட்ரோ ரயிலின் தூண் சரிந்து விழுந்தது. இதில் மென்பொறியாளார் தேஜஸ்வினி (28), அவரது மகன் விஹன் (2) ஆகியோர் உயிரிழந்தனர். தேஜஸ்வினியின் கணவர் லோஹித் (34), மகள் வீனா (2) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதைத் தொடர்ந்து பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் சார்பில் லோஹித்துக்கு ரூ.20 லட்சம் நஷ்ட ஈடு வழங்கப்பட்டது.
இந்நிலையில், லோஹித் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ''பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் அலட்சியம், கவனக்குறைவு காரணமாக இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் எனது இளம் மனைவி, மகனை இழந்திருக்கிறேன். நானும் என் மகளும் இன்னும் சிகிச்சை மேற்கொண்டு வருகிறோம். இதனால் மெட்ரோ ரயில் நிர்வாகம் அளித்த ரூ.20 லட்சம் நஷ்ட ஈடு போதுமானதாக இல்லை. தேஜஸ்வினி இறப்பதற்கு முன்பாக வங்கியில் கடன் வாங்கி அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கினோம். அந்த கடனை செலுத்த வேண்டியுள்ளதால் ரூ.10 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும்'' என கோரியுள்ளார்.
இந்த மனுவுக்கு பதில் அளிக்க மெட்ரோ ரயில் நிர்வாகம், தலைமை பொறியாளர்,சம்பந்தப்பட்ட இடத்தில் பணியாற்றிய முதன்மை பொறியாளர், ஐசிஐசிஐ காப்பீட்டு நிறுவன மேலாளர், நாகார்ஜூனா கட்டுமான நிறுவன நிர்வாக இயக்குநருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி கிருஷ்ணா தீட்ஷித் உத்தரவிட்டுள்ளார்.