இந்தியா

இராக்கிலிருந்து 29 நர்ஸ்கள் தாயகம் திரும்பினர்

செய்திப்பிரிவு

உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள இராக்கில் இருந்து மேலும் 29 இந்திய செவிலியர்கள் சனிக்கிழமை தாயகம் திரும்பினர்.

கேரளத்தைச் சேர்ந்த இவர்கள் அனைவரும் இராக்கின் தியாலாவில் உள்ள பகுபா பொது மருத்துவமனையில் பணியாற்றி வந்தனர். அவர்கள் அனைவரும் சார்ஜாவுக்கு அழைத்து வரப்பட்டு அங்கிருந்து கேரளத்திற்கு விமானம் மூலம் அனுப்பிவைக்கப்பட்டனர்.

அவர்களில் ஒரு செவிலியர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “மருத்துவமனைக்கு அருகே வெடிகுண்டுச் சத்தங்கள் கேட்டாலும் மருத்துவமனையின் உள்ளே எந்தப் பிரச்சினையும் இருக்கவில்லை” என்றார்.

இன்னொரு செவிலியர் கூறும்போது, “வங்கியில் இருந்து கடன் பெற்று எத்தனையோ கனவுகளுடன் இராக் சென்றோம். ஆனால் எதுவுமே நிறைவேறாமல் நாங்கள் திரும்பி வந்திருக்கிறோம்” என்றார்.

ஜூலை 5-ம் தேதி 46 செவிலியர்கள் இராக்கிலிருந்து இந்தியாவுக்குத் திரும்பினர். அவர்களில் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர். இவர்கள் அனைவருக்கும் தலா ரூ.3 லட்சத்தை வெளிநாடு வாழ் இந்தியத் தொழிலதிபர் சி.கே.மேனன் வழங்க முன்வந்துள்ளார்.

இராக்கிலிருந்து திரும்பி வந்த செவிலியர்களின் மறுவாழ்வு குறித்து கேரள முதல்வர் உம்மன் சாண்டி தலைமையில் திருவனந்தபுரத்தில் கடந்த வெள்ளிக்கிழமை உயர் நிலைக் கூட்டம் நடந்தது.

SCROLL FOR NEXT