கோப்புப்படம் 
இந்தியா

ஆன்லைன் சூதாட்ட மோசடியில் ரூ.58 கோடியை இழந்த தொழிலதிபர்

செய்திப்பிரிவு

நாக்பூர்: நாக்பூரை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் ஆன்லைன் சூதாட்ட மோசடியில் ரூ.58 கோடியை இழந்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரை சேர்ந்த ஒரு தொழிலதிபரிடம், ‘ஆன்லைன் சூதாட்டம் மூலம் அதிக வருவாய் ஈட்ட முடியும்’ என்று, நவரத்தன் ஜெயின் என்பவர் ஆசை காட்டியுள்ளார். முதலில் தயங்கிய தொழிலதிபர், பிறகு நவரத்தன் கூறியபடி, ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட ஆரம்பித்தார்.

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கான இணையதள லிங்க்குகளை வாட்ஸ்அப் மூலம் தொடர்ந்து அவருக்கு அனுப்பிய நவரத்தன், எவ்வளவு பந்தயம் கட்ட வேண்டும் என்பது உட்பட சூதாட்டம் தொடர்பான வழிகாட்டுதல்களையும் வழங்கி வந்துள்ளார்.

ஆரம்பத்தில், தொழிலதிபருக்கு நிறைய வெற்றி கிடைத்தது. ரூ.5 கோடி வரை லாபம் பார்த்ததால், கூடுதல் நம்பிக்கையுடன் அதிக தொகை வைத்து சூதாடி உள்ளார். விரைவிலேயே அவருக்கு நஷ்டம் ஏற்படத் தொடங்கியது.

ஆனாலும், அடுத்தடுத்த ஆட்டங்களில் லாபம் பார்த்துவிடலாம் என்று நவரத்தன் ஆசைகாட்டி, தொடர்ந்து அவரை விளையாட வைத்துள்ளார். இதை நம்பி தொடர்ந்து விளையாடி வந்த தொழிலதிபர், மொத்தமாக ரூ.58 கோடி பணத்தை சூதாட்டத்தில் இழந்தார்.

ஒருகட்டத்தில், சூதாட்ட லிங்க் வழியாக நவரத்தன் தன்னை திட்டமிட்டு ஏமாற்றுவதாக தொழிலதிபருக்கு சந்தேகம் வந்தது. இதையடுத்து, சைபர் கிரைம் பிரிவில் புகார் கொடுத்தார். போலீஸார் நவரத்தனின் வீட்டுக்கு சென்று சோதனை செய்தனர். அவரது வீட்டில் இருந்து ரூ.14 கோடி ரொக்கம், 4 கிலோ தங்க பிஸ்கெட்கள் சிக்கின.

ஆனால், போலீஸ் தேடுவதை அறிந்து, நவரத்தன் தப்பிச் சென்றுவிட்டார். அவர் துபாய்க்கு தப்பி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT