பெங்களூரு: கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. பாஜக 66 இடங்களைப் பிடித்து 2-வது இடத்தையும், மஜத 19 இடங்களில் வென்று 3-வது இடத்தையும் பிடித்தன. கர்நாடக முதல்வராக சித்தராமையா பொறுப்பேற்றார்.
கடந்த வாரம் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், பாஜக சார்பில் இன்னும் எதிர்க்கட்சி தலைவர் பெயர் அறிவிக்கப்படவில்லை. எதிர்க்கட்சி தலைவர் பதவிக்காக முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை, முன்னாள் அமைச்சர்கள் அசோகா, சோமண்ணா, அஷ்வத் நாராயண் உள்ளிட்டோர் காய்களை நகர்த்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஆளும் காங்கிரஸுக்கு எதிரான போராட்டங்களில் பாஜகவுடன் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மஜத எம்எல்ஏக்களும் பங்கேற்றுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு பாஜக எம்எல்ஏக்கள் 10 பேர் இடைநீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் மஜத மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான குமாரசாமி பாஜகவினருடன் சென்று ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை சந்தித்தார்.
இதைத் தொடர்ந்து கர்நாடகாவில் காங்கிரஸை எதிர்க்க பாஜகவுடன் இணைந்து செயல்படப் போவதாகவும் அறிவித்தார். தவிர வரும் மக்களவைத் தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறியுள்ளார்.
கர்நாடக எதிர்க்கட்சி தலைவர் பதவியை கைப்பற்றுவதற்காகவே பாஜகவுடன் குமாரசாமி கைகோத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக மஜத மூத்த தலைவர் ஆயனூர் மஞ்சுநாத் கூறும்போது, ''ஜூலை 28-ம் தேதிக்கு பிறகு கர்நாடக அரசியல் சூழல் மாறும். பாஜகவும் மஜதவும் இணைந்து முக்கியமான போராட்டங்களை முன்னெடுக்கும். இரு கட்சிகளும் ஒருங்கிணைந்து குமாரசாமியை எதிர்க்கட்சி தலைவராக அறிவிக்கப் போகின்றன'' என கூறியுள்ளார்.