புதுடெல்லி: ராணுவ அதிகாரிக்கு எதிராக 22 ஆண்டுகளுக்கு முன் அவதூறு செய்தி வெளியிட்ட வழக்கில் ரூ.2 கோடி இழப்பீடு வழங்க தெஹல்கா செய்தி நிறுவனத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பத்திரிகையாளர்கள் தருண் தேஜ்பாலும், அனிருத்தா பஹலும் இணைந்து 1999-ல் டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு ‘தெஹல்கா’ செய்தி தளத்தை ஆரம்பித்தனர். புலனாய்வு செய்திகளை தெஹல்கா வெளியிட்டு வந்தது.
இந்நிலையில், 2001-ல் அனிருத்தா, மேத்யூ சாமுவேல் இணைந்து ‘ஆபரேஷன் வெஸ்ட் எண்ட்’ என்ற தலைப்பில் புலனாய்வு செய்தியை தெஹல்கா தளத்தில் எழுதினர்.
ராணுவ தளவாடங்கள் வாங்குவதில் ஊழல் நடைபெறுவதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அப்போதிருந்த மத்திய பாதுகாப்பு அமைச்சர் உட்பட ராணுவ அதிகாரிகள் பலர் பதவியிலிருந்து விலகும் சூழல் ஏற்பட்டது.
மேஜர் ஜெனரலாக இருந்த அலுவாலியா ரூ.50 ஆயிரம் லஞ்சம் பெற்றார் என்றும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை எதிர்த்து மேஜர் ஜெனரல் அலுவாலியா நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அவ்வழக்கை விசா ரித்த டெல்லி உயர் நீதிமன்றம், “தெஹல்கா செய்தி நிறுவனம் அலுவாலியா நற்பெயருக்கு களங்கம் விளைவித்துள்ளது. ராணுவத்தில் மதிப்புக்குரிய முக்கியப் பொறுப்பில் இருக்கும் ஒருவர் மீது லஞ்சம் பெற்றார் என்று பொய்யாக குற்றச்சாட்டு சுமத்துவதைவிட, அந்த நபரின் மீதான நம்பகத்தன்மையை குலைக்கக்கூடியது வேறொன்றும் இல்லை” என்று கூறி தெஹல்கா இணை நிறுவனர் தருண் தேஜ்பால் மற்றும் அந்தச் செய்தியை எழுதிய அனிருத்தா பஹல் மற்றும் மேத்யூ சாமுவேல் ஆகியோர் மேஜர் ஜெனரல் அலுவாலியாவுக்கு ரூ.2 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.