புதுடெல்லி: மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங்குக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இருந்த பிரிஜ் பூஷண் சரண் சிங்குக்கு எதிராக ஒரு சிறுமி உள்பட 7 மல்யுத்த வீராங்கனைகள் கடந்த ஏப்ரல் மாதம் பாலியல் புகார் அளித்தனர். இதில் சிறுமியும் அவரது தந்தையும் புகாரை திரும்ப பெற்றுக்கொண்டனர். இந்த புகார் தொடர்பாக டெல்லி காவல்துறையினர் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கடந்த ஜூன் 15-ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
இதற்கிடையே தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி பிரிஜ் பூஷண் சரண் சிங் டெல்லி பெருநகர நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதை நேற்று விசாரித்த மாஜிஸ்திரேட் ஹர்ஜீத் சிங் ஜஸ்பால், பிரிஜ் பூஷண் சரண் சிங்குக்கு சில நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
நீதிமன்றத்தின் உரிய அனுமதி பெறாமல் நாட்டை விட்டு வெளியே பயணம் மேற்கொள்ளக்கூடாது, பிணைத்தொகையாக 25 ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டும், சாட்சிகளுக்கு மிரட்டல் விடுக்கக்கூடாது என்பது உள்ளிட்ட நிபந்தனைகளையும் விதித்துள்ளார் மாஜிஸ்திரேட் ஹர்ஜீத் சிங் ஜஸ்பால். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் உதவி செயலாளர் வினோத் தோமருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.