நதி நீர் இணைப்பு பெரும் பலனைத் தரும் என பட்ஜெட் தாக்கலின் போது மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது: நதிகள் இத்தேசத்தின் உயிர்நாடிகள். உணவு உற்பத்திக்கு மட்டுமல்லாமல், குடிப்பதற்கும் நீரைத் தருகின்றன. துரதிருஷ்ட வசமாக நாடுமுழுவதும் வற்றாத ஜீவநதிகள் இல்லை.
நதிகளை இணைக்கும் முயற்சி நல்ல பலனைத் தரும். இவ்விஷயத்தில் தீவிர கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது. நதி நீர் இணைப்பு தொடர்பான விரிவான அறிக்கை தயாரிக்கும் பணிக்காக ரூ.100 கோடியை ஒதுக்கியுள்ளேன்" என்றார்.
நதி நீர் இணைப்புத் திட்டம் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் ஊக்கு விக்கப்பட்டது. இதற்காக, மத்திய நீர்வள அமைச்சகம் தேசிய தொலைநோக்குத் திட்டத்தை (என்பிபி) 1980-ம் ஆண்டு வகுத்தது. உபரியாக நீர் இருக்கும் நதியிலிருந்து, குறைவான நீருள்ள நதிக்கு நீர் கொண்டுவரும் வகையில் கால்வாய் அமைப்பதே இத்திட்டத்தின் நோக்கம்.
இமயமலை நதிகளை இணைப்பது, தீபகற்ப நதிகளை இணைப்பது என இருவகைகளில் இது திட்டமிடப்பட்டது. இமயமலை நதிகளை 14 வழிகளிலும், தீபகற்ப நதிகளை 14 வழிகளிலும் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தீபகற்ப நதிகளில், கென்-பேத்வா, பார்வதி-காலிசிந்த்-சம்பல், டாமன்கங்கா-பிஞ்சால், பார்-தபி-நர்மதா மற்றும் கோதாவரி (பொலாவரம்)-கிருஷ்ணா (விஜயவாடா) ஆகிய 5 இணைப்பு வழிகள் அடையாளம் காணப்பட்டு, முன்னுரிமை அடிப்படையில் விரிவான அறிக்கை தயாரிக்கப்படவுள்ளது. முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, இமயமலை நதிகளை இணைப்பது சாத்தியமில்லை எனக் கூறியது நினைவு கூரத்தக்கது.