ஸ்ரீநகர்: பூஞ்ச் மாவட்டத்தில் கொல்லப்பட்ட 4 தீவிரவாதிகளும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் இந்தியாவுக்கு எதிரான ஜிஹாத் போரில் ஈடுபட்டவர்கள் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஜம்மு - காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் சூரன்கோட் பகுதியில் பாதுகாப்பு படையினருடன் நடைபெற்ற மோதலில் நேற்று முன்தினம் 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்நிலையில் இதுதொடர்பாக ராணுவ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் கொல்லப்பட்ட 4 பேரும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்றும், லஷ்கர்-இ-தொய்பா (எல்இடி) தீவிரவாத அமைப்புக்காக செயல்பட்டு வந்தவர்கள் என்றும் விசாரணையில் தெரிய வந்தது.
இந்தியாவுக்கு எதிரான ஜிஹாத் போரில் இவர்கள் 4 பேரும் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளனர். மேலும் இவர்கள் ஆப்கானிஸ்தானில் தீவிரவாதப் பயிற்சியைப் பெற்றுள்ளனர்.
அடையாள அட்டை: அவர்களிடமிருந்து அடையாளஅட்டைகளை இந்திய ராணுவத்தினர் பறிமுதல் செய்துள்ளனர். இவர்கள் மெஹ்மூத் அகமது, அப்துல் ஹமீது, முகமது ஷெரீப் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது. 4-வது நபர் அடையாளம் காணப்படவில்லை. அடையாளம் காணப்படாத நபர் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள குர்ஷிதாபாத் பகுதியைச் சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது.
சஜித் ஜுட் என்ற கமாண்டரின் தலைமையிலான 12 பேர் கொண்ட எல்இடி தீவிரவாதக் குழுவில் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள கோட்லி, சர்வதேச எல்லையில் உள்ள சியால்கோட் பகுதியில் செயல்பட்டு வந்துள்ளது. இவர்கள் அனைவரும் 23 வயது முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள். கடந்த 18 மாதங்களாக காஷ்மீரின் ரஜவுரி-பூஞ்ச் பகுதியில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
காடுகளால் சிக்கல்: பாகிஸ்தானிலிருந்து காஷ்மீருக்குள் அத்துமீறி நுழையும் தீவிரவாதிகளுக்கு பாதுகாப்பாக செயல்பட்டுவந்துள்ளனர். ரஜவுரி-பூஞ்ச் பகுதியில் அடர்த்தியான காடுகள் அமைந்துள்ளன. இதைப் பயன்படுத்தி இப்பகுதியில் மறைந்து வசித்து வந்துள்ளனர்.
இப்பகுதியில் தங்களது கமாண்டரின் உத்தரவின் பேரில் வன்முறை, தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டுவந்துள்ளனர். மேலும் 2020 முதல்இப்பகுதியில் 24 பொதுமக்கள், ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதற்கும் காரணமாக அமைந்துள்ளனர். மே 24-ல் நடைபெற்ற ஜி-20 பிரதிநிதிகள் மாநாட்டை சீர்குலைக்க கடந்த ஏப்ரல் 20, மே 5-ம் தேதி பூஞ்ச் பகுதியில் நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலில் இவர்களுக்குத் தொடர்பு இருப்பதும் தெரிய வந்துள்ளது.
தீவிரவாதிகளிடம் இருந்து கிடைத்த தகவல்கள் மூலம், பாகிஸ்தானில் தீவிரவாதம் இன்னும் உயிருடன் இருப்பதைக் காட்டுகிறது என்றும் காஷ்மீர் பள்ளத்தாக்கை நோக்கி தீவிரவாதிகள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர் என்பதை காட்டுகிறது என்றும் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.