சியாச்சின்: லடாக் பகுதியிலுள்ள சியாச்சின் பனிச்சிகரத்தில் அமைந்துள்ள முகாமில் நடந்த தீ விபத்தில் ராணுவ அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். 3 வீரர்கள் காயமடைந்தனர்.
லடாக்கின் லே பகுதியில் சியாச்சின் பனிச்சிகரம் அமைந்துள்ளது. சியாச்சின் பகுதியில் அமைந்துள்ள ராணுவ முகாமில் நேற்று அதிகாலை 3.30 மணிக்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் ராணுவ அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். மேலும் 3 வீரர்கள் காயமடைந்தனர். அவர்கள் அருகிலுள்ள ராணுவ முகாமில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து லே பகுதியில் உள்ள பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியதாவது:
அதிகாலை நடந்த தீ விபத்தில் சிக்கி கேப்டன் அன்ஷுமன் சிங் என்ற ரெஜிமெண்ட் மருத்துவ அதிகாரி உயிரிழந்தார். அப்போது ஏற்பட்ட புகையால் மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
இதில் 3 ராணுவ வீரர்கள் மயங்கி விழுந்தனர். மேலும் அவர்களுக்கு தீக்காயமும் ஏற்பட்டுள்ளது. அவர்கள் உடனடியாக ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தீ விபத்து ஏற்பட்டது எப்படி என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இவ்வாறு பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் கூறினார்.