மேற்கு மகாராஷ்டிராவின் கோஹல்புர் மாவட்டத்தில், 90 வயது மூதாட்டி ஒருவர் தனக்குத் தானே சிதை மூட்டி தீ வைத்துக் கொண்டுள்ளார்.
அந்த மூதாட்டியின் பெயர் கல்லவா டாடு காம்ளே. பாமினி என்ற கிராமத்தில் தனியாக வசித்து வந்தார். அவரது 57 வயது மகன் வித்தால், இவருக்குப் பக்கத்து வீட்டில் வசித்து வருகிறார். இவர் போக்குவரத்துத் துறையில் நடத்துநராக வேலை செய்து கொண்டிருக்கிறார்.
நவம்பர் 13ஆம் தேதி இரவு, கல்லவாவின் பேத்தி, அவருக்கு இரவு உணவு தந்தார். பிறகு உறங்கச் சென்றார். இரவு தனது வீட்டின் கதவை உள்ளே தாழிட்டுக் கொண்டார். பின் தன்னைச் சுற்றி வறட்டி, சுள்ளிகள் என சிதை உருவாக்கினார். பின் அதில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
அடுத்த நாள் காலை பேத்தி தனது பாட்டிக்காக கையில் பாலுடன் வந்து வீட்டின் கதவைத் தட்டினார். நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் தனது தந்தையிடம் தெரிவித்தார்.
வித்தால் உடனே விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே நுழைந்தார். வீட்டுக்குள் நடு வீட்டில் சாம்பலும், பாதி எரிந்த உடல் பாகங்களையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
போலீஸார் விசாரணை நடத்தியதில், வாழ்க்கையில் விரக்தி அடைந்ததால் அந்த மூதாட்டி இவ்வாறு முடிவெடுத்திருக்கிறார் என்று தெரிய வந்துள்ளது. விபத்தினால் மரணம் என வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், மேற்கொண்டு விசாரணை நடக்கிறது என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.