இந்தியா

அமெரிக்காவின் பென்டகனை மிஞ்சியது குஜராத்தில் கட்டப்பட்டுள்ள உலகின் பெரிய அலுவலகம்

செய்திப்பிரிவு

சூரத்: அமெரிக்காவின் பாதுகாப்புத் துறை அலுவலகமான பென்டகன், உலகின் மிகப் பெரிய அலுவலகமாக திகழ்ந்து வருகிறது. இந்நிலையில் பென்டகனைவிட பெரிய அலுவலகக் கட்டிடம் ஒன்று இந்தியாவில் விரைவில் திறக்கப்பட உள்ளது.

குஜராத்தில் சூரத் மாவட்டத்தில்வைர வர்த்தக மையம் கட்டப்பட்டுள்ளது. 35 ஏக்கரில் 9 செவ்வக வடிவ அமைப்புகளாக இது கட்டப்பட்டுள்ளது. ஒவ்வொன்றும் 15 மாடிகளைக் கொண்டுள்ளன.

வைரத் தொழிலின் தலைநகரமாக சூரத் விளங்குகிறது. இந்நிலையில், வைரத்தை வெட்டுதல், பட்டை தீட்டுதல், அதை விற்பனை செய்தல் உள்ளிட்ட அனைத்துச் செயல்பாடுகளையும் ஒரே இடத்தில் ஒருங்கிணைக்கும் வகையில் இந்தப் புதிய கட்டிடம் கட்டப்படுள்ளது.

நவம்பரில் திறப்பு: மொத்தம் 4200 அலுவலகங்கள் இந்தக் கட்டிடத்தில் செயல்பட முடியும், வைரம் தொடர்பான தொழிலில் ஈடுபடும் 65,000 பேர் பணியாற்ற முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தை வரும் நவம்பர் மாதம் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளார்.

லாப நோக்கற்ற அமைப்பான சூரத் வைர பரிவர்த்தனை நிறுவனம் (எஸ்டிபி) இதை உருவாக்கியுள்ளது. இந்தக் கட்டிடத்தை இந்திய கட்டிடக்கலை நிறுவனம் மார்போஜெனிஸ் வடிவமைத்துள்ளது. இந்தக் கட்டிடத்தைக் கட்ட 4 ஆண்டுகள் ஆகியுள்ளன.

எஸ்டிபி அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி மகேஷ்காதவி கூறுகையில், “பென்டகனை விட பெரிய அலுவலகம் கட்ட வேண்டும் என்று போட்டி மனப்பான்மையில் இதைக் கட்டவில்லை. தேவையின் அடிப்படையிலே இந்த கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

கட்டுமானம் நிறைவடைவதற்கு முன்பே வைர தொழிலில் ஈடுபடும் நிறுவனங்கள் இந்த அலுவலகங்களை வாங்கிவிட்டன. சூரத்தில் வைரத் தொழிலில் ஈடுபடும் ஆயிரக்கணக்கான மக்கள் வர்த்தக நிமித்தம் தினமும் மும்பைக்குச் செல்ல வேண்டிய சூழலில் உள்ளனர். இந்த கட்டிடம் பயன்பாட்டுக்கு வரும்பட்சத்தில் இந்தப் பயண நேரம் மிச்சமாகும். மும்பைக்குச் செல்லாமலேயே சூரத்தில் இருந்தபடி வர்த்தகத்தை மேற்கொள்ள முடியும்” என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT