இந்தியா

நிருபேந்திர மிஸ்ரா நியமன விவகாரத்தில் சட்டத் தடைகள் விலகின- டிராய் திருத்த மசோதாவுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல்

செய்திப்பிரிவு

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்னாள் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா, பிரதமரின் முதன்மைச் செயலராக நியமிக்கப்பட்டதை முறைப்படுத்த குறுக்கீடாக இருந்த சட்ட தடைகளை களைய வகை செய்யும் மசோதாவுக்கு நாடாளுமன்றத்தின் சம்மதம் செவ்வாய்க்கிழமை கிடைத்தது.

காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தபோதிலும் அதற்கு மத்தியில் மசோதா நிறைவேறியது.

மக்களவையில் திங்கள்கிழமை நிறைவேறிய இந்த மசோதா. மாநிலங்களவையில் குரல் வாக் கெடுப்பில் செவ்வாய்க்கிழமை நிறைவேறியது.

மாநிலங்களவையில் இந்த மசோதாவை சட்டம், தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தாக்கல் செய்து கூறியதாவது: தற்போதுள்ள சட்டத்தின்படி தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிராய்) முன்னாள் தலைவர் ஒருவர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றால் 2 ஆண்டுகளுக்குப் பிறகே தனியார் பணியை மேற் கொள்ளலாம். ஆனால் ஆயுள் வரை அரசுப்பணிக்கு வரக்கூடாது. பொதுவான விதிகளிலிருந்து மாறுபடும் இந்த முரண்பாட்டை களைவதே இந்நடவடிக்கையின் நோக்கம். போட்டி ஊக்குவிப்பு ஆணையம், விமான நிலையை பொருளாதார ஒழுங்கு முறை ஆணையம், செபி போன்ற அமைப்புகளுக்கு இது போன்ற சட்ட நிபந்தனை இல்லை. எல்லா ஒழுங்கு முறை ஆணையங்களுக் குள்ளும் சீரான தன்மையை கொண்டுவரவேண்டும் என்பதால் சட்டத்தை திருத்த அரசு முடிவு செய்தது. திறமைமிக்க ஒருவரின் சேவையை அரசு பயன்படுத் திக்கொள்ள குறுக்கீடாக உள்ள தடையை நீக்க அரசு விரும்புகிறது. இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் பேசினார்.

பிரதமரின் முதன்மைச் செயல ராக மிஸ்ராவை நியமிக்க பிறப்பிக்கப்பட்ட டிராய் திருத்த அவசரச்சட்டத்தை ஏற்கக் கூடாது என வலியுறுத்தி காங்கிரஸ் உறுப்பினர் டி.சுப்பிராமி ரெட்டி முன்னதாக தீர்மானம் ஒன்றை தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறியதாவது: அவசரச் சட்டம் என்பது பிரம்மாஸ்திரம் போன்றதாகும். அதை அரசு அபூர்வமாகவே பயன்படுத்த வேண்டும். தனி நபர் எவருக்கும் நான் எதிரானவன் அல்ல என்றார்.

மணி சங்கர் அய்யர் (காங்கிரஸ்) பேசும்போது, இந்த மசோதா அரசமைப்புச் சட்டத்தை மீறுவதாக உள்ளதாகவும், திருத் தம் கொண்டுவர அவசர சட்ட வழியை கையாண்டது சரியான தல்ல என்றும் ஆட்சேபித்தார். இந்த கருத்தை ரவி சங்கர் பிரசாத் மறுத்தார்.

தாம் விரும்பிய அதிகாரிகளை தேர்வு செய்ய பிரதமருக்கு சிறப்பு உரிமை உள்ளது. எனவே இந்த மசோதாவை ஆதரிப்பதாக அதிமுக உறுப்பினர் வி,மைத்ரேயன் கூறினார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் டி.ராஜா பேசும்போது, இந்த மசோதாவை ஆதரிப்பதாக வும் டிராய் அமைப்பிலிருந்து ஓய்வு பெற்ற உறுப்பினர்கள் ,தலைவர் ஆகியோர் தொலைத்தொடர்பு சேவை சார்ந்த வர்த்தகம் தொடர்புடைய நிறுவனங்களில் பணியாற்ற அனுமதிக்கும் பிரிவை மட்டுமே எதிர்ப்பதாகவும் சொன்னார்,

ஓய்வுக்குப் பிறகு அரசு சார்ந்த எந்த பணியிலும் மிஸ்ராவை நியமிப்பதற்கு தடையாக நின்ற டிராய் சட்டத்தின் ஒரு பிரிவை திருத்த மே 28ம் தேதி அரசு அவசரச்சட்டம் பிறப்பித்தது. அன்றே பிரதமர் அலுவலகத்தில் அவர் பணியில் சேர்ந்தார். அவரது நியமனத்தை சட்டபூர்வமாக்க டிராய் திருத்த மசோதா கொண்டு வரப்பட்டது.

SCROLL FOR NEXT