புதுடெல்லி: டெல்லி மின்சார ஒழுங்குமுறை ஆணைய தலைவர் நியமன விவகாரத்தில் துணைநிலை ஆளுநரும் முதல்வரும் பேசி முடிவு எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் ஆலோசனை வழங்கி உள்ளது.
டெல்லியில் குடிமைப் பணி அதிகாரிகளை கட்டுப்படுத்துவது தொடர்பாக அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசுக்கும் துணைநிலை ஆளுநருக்கும் இடையே மோதல் நிலவுகிறது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குதான் குடிமைப் பணி அதிகாரிகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் உள்ளது என தீர்ப்பு வழங்கியது.
ஆனால், டெல்லி அரசின் குடிமைப் பணி அதிகாரிகள் நியமனம், பணியிட மாற்றத்தை மத்திய அரசு கட்டுப்படுத்தும் அவசரசட்டத்தை கொண்டு வந்தது. இந்த அவசர சட்டத்தை எதிர்த்து ஆம் ஆத்மி அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
இதனிடையே, அவசர சட்டத்தின் அடிப்படையில் டெல்லி மின்சார ஒழுங்குமுறை ஆணைய (டிஇஆர்சி) தலைவராக அலகாபாபத் உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி உமேஷ் குமார் கடந்த ஜூன் 21-ம் தேதி நியமிக்கப்பட்டார். மத்திய அரசின் இந்த நியமனத்தை எதிர்த்து டெல்லி அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இதை விசாரித்த நீதிமன்றம், மறு உத்தரவு வரும் வரை உமேஷ் குமார் பதவியேற்கக் கூடாது என கடந்த 4-ம் தேதி உத்தரவிட்டது. மேலும் இந்த மனு குறித்து டெல்லி துணைநிலை ஆளுநர் மற்றும் மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இந்த மனு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆம் ஆத்மி அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, “டிஇஆர்சி தலைவர் பதவி 6 மாதங்களாக காலியாக உள்ளது” என வாதிட்டார்.
இதைக் கேட்ட தலைமை நீதிபதி கூறும்போது, “இந்த விவகாரத்தில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. இருதரப்பும் இணைந்துதான் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். நாங்கள் ஒரு ஆலோசனையை கூறுகிறோம். துணை நிலை ஆளுநரும் முதல்வரும் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி இருதரப்பும் ஏற்றுக்கொள்ளும் ஒருவரை டிஇஆர்சி தலைவராக நியமிக்கலாம்” என்றார்.
தலைமை நீதிபதியின் இந்த ஆலோசனையை ஏற்றுக் கொள்வதாக துணைநிலை ஆளுநர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே தெரிவித்தார்.
இதனிடையே, மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “டெல்லி அவசர சட்டத்துக்கு மாற்றாக வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் மசோதா தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான பிரமாண பத்திரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது” என்றார்.
இதையடுத்து, டெல்லி அவசர சட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்படலாம் என நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த மனுக்கள் மீதான அடுத்த விசாரணையை 20-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.