ரயில்வே பட்ஜெட் தாக்கலின்போது, திரிணமூல் எம்.பி.க்கள் அமளியில் ஈடுப்பட்டதைத் தொடர்ந்து, உறுப்பினர்கள் அனைவரும் அவையில் தங்களது கண்ணியத்தை காத்து நடக்க வேண்டும் என்று நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.
நாடாளுமன்ற வளாகத்தின் வெளியே இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய வெங்கய்ய நாயுடு, "நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் அனைவரும் நாகரிகத்தையும் கண்ணியத்தையும் காத்திட வேண்டும். எம்.பி.க்கள் அவர்களது தொகுதி பிரச்சனைகள் குறித்து பேசும்போது அவர்களை இடையூறு செய்யக்கூடாது.
ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது, திரிணமூல் எம்.பி.க்கள் நடந்துக்கொண்ட விதமும், பிரதமர் மீது அவதூறு பேசியதும் முறையற்றது. மேற்கு வங்கத்தில் ஏற்கெனவே பல்வேறு ரயில்வே பணிகள் நடைபெற்று வருகின்றன.
காங்கிரஸ் கட்சியினர், ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடாவின் வீட்டிற்கு வெளியே நடந்துகொண்ட விதம் கவலையளிப்பதாக உள்ளது" என்றார்.
சதானந்த கவுடா தாக்கல் செய்த பட்ஜெட் ஒன்றுக்கும் உதவாத பட்ஜெட் என்று கோஷமிட்டு, டெல்லி மாநில காங்கிரஸ் தலைவர் அர்விந்தர் சிங் தலைமையில் காங்கிரஸ் தொண்டர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் சதானந்த கவுடாவின் பெயர் பலகையை கீழே போட்டு மிதித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.