இந்தியா

விண்வெளி துறையில் முதன்மை நாடாக இந்தியா உருவெடுக்கும்: மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் நம்பிக்கை

செய்திப்பிரிவு

சென்னை: மத்திய அறிவியல் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங், நேற்று ஸ்ரீஹரிகோட்டாவில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் மற்றும் விஞ்ஞானிகளுடன் அமர்ந்து, சந்திரயான்-3 விண்கலம் ஏவப்பட்டதை பார்வையிட்டார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அவர்கள் கூறியதாவது:

மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்: விண்வெளி ஆராய்ச்சி மீது பிரதமர் மோடி கடந்த 5 ஆண்டுகளாக தனி கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில், இந்திய விண்வெளி ஆய்வு நடவடிக்கைகளில் தனியார் பங்களிப்புகளை ஊக்குவித்தார். அதன் பலனாக, 100-க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் விண்வெளி துறையில் தங்கள் பங்களிப்பை வழங்கி வருகின்றன.

கரோனா காலத்தில் விண்வெளி ஆய்வுத் துறையின் ஒத்துழைப்புடன் தொலைதூர மருத்துவ சேவை நடைபெற்றது. அந்தவகையில் விண்வெளி ஆய்வுகளால் கிடைக்கும் பலன்களால் மக்களின் தினசரி வாழ்க்கை மேம்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தியா மீதான உலக நாடுகளின் பார்வை வேறு விதமாக இருந்தது. இப்போது, விண்வெளி ஆராய்ச்சியில் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளின் வரிசையில் இந்தியா உள்ளது. அடுத்த 25 ஆண்டுகளில் விண்வெளித் துறையில் உலகின் முதன்மை நாடாக இந்தியா உருவெடுக்கும்.

இஸ்ரோ தலைவர் சோம்நாத்: சந்திரயான்-3 திட்டத்தின் முதல்கட்ட வெற்றியை பதிவு செய்துள்ளோம். இதற்காக உழைத்த விஞ்ஞானிகள் அனைவருக்கும் நன்றி. விண்வெளி அறிவியல் ஆய்வு திட்டங்களுக்கு பிரதமர் மோடி தொடர்ந்து ஊக்கம் அளித்து வருவதால், இஸ்ரோவால் தொடர்ந்து ஆராய்ச்சிகளை முன்னெடுக்க முடிகிறது.

கடந்த 2019-ல் சந்திரயான்-2 விண்கலத்தின் லேண்டர், நிலவில் தரையிறங்க முடியாமல் பின்னடைவை சந்தித்தது. அதற்கான காரணங்கள் தீவிரமாக ஆராயப்பட்டன. இதையடுத்து, லேண்டரில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன் பலனாக, இப்போது ஏவப்பட்டுள்ள சந்திரயான்-3 விண்கலம் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கும் என்று நம்புகிறோம்.

சந்திரயான்-3 விண்கலம் நிலவுக்கு 40 முதல் 42 நாட்கள் பயணிக்கும். உந்துவிசை கலன் ஆக.1-ம் தேதி நிலவின் சுற்றுப்பாதையில் செலுத்தப்படும். உந்துவிசை கலனில் இருந்து லேண்டர் ஆக.17-ம் தேதி பிரிந்து நிலவில் தரையிறங்க தொடங்கும். ஆக.23-ம் தேதி மாலை 5.45 மணி அளவில் லேண்டர் நிலவில் தரையிறக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

SCROLL FOR NEXT