அஜித் பவார் 
இந்தியா

மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவாருக்கு நிதி, திட்டம் துறைகள் ஒதுக்கீடு

செய்திப்பிரிவு

மும்பை: தேசியவாத காங்கிரஸ் மூத்ததலைவர் அஜித் பவார். அவரது தலைமையில் தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கடந்த 2-ம்தேதி மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக கூட்டணி அரசில் இணைந்தனர். துணை முதல்வராக அஜித் பவார் பதவியேற்றார். அவரது ஆதரவாளர்கள் 8 எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

இதைத் தொடர்ந்து மகாராஷ்டிர அமைச்சரவையில் மாற்றங்கள்செய்யப்பட்டு புதிய அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன. இதன்படி துணை முதல்வர் அஜித் பவாருக்கு நிதி, திட்டம் ஆகிய துறைகள்ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன. அவர் நேற்று நிதித்துறை அலுவலகத்தில் தனது பணியைத் தொடங்கினார்.

அஜித் பவார் அணியை சேர்ந்த அமைச்சர்களுக்கு பொது விநியோகம், பேரிடர் மேலாண்மை, விளையாட்டு, மகளிர்- குழந்தைகள் நலன், சுகாதாரம் உள்ளிட்ட துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவிடம் பொது நிர்வாகம், ஊரக வளர்ச்சி, தகவல் தொழில்நுட்பம், போக்குவரத்து, சமூக நீதி, சுற்றுச்சூழல், சுரங்கம் உள்ளிட்ட துறைகள் உள்ளன. துணை முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான தேவேந்திர பட்னாவிஸிடம் உள்துறை, சட்டம்-நீதி, நீர்வளம், எரிசக்தி உள்ளிட்ட துறைகள் உள்ளன. துணை முதல்வர் அஜித் பவாரின் ஆதரவாளர்களுக்கு முக்கிய துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதால் முதல்வர் ஷிண்டே அணியை சேர்ந்த எம்எல்ஏக்கள், பாஜக எம்எல்ஏக்கள் இடையே அதிருப்தி நிலவுவதாகக் கூறப்படுகிறது.

உத்தவ் தாக்கரே துரோகம்: அஜித் பவார் தலைமையிலான என்சிபி, ஆளும் கூட்டணியில் இணைந்ததை அடுத்து மகாராஷ்டிர மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் ஷிண்டே, தானேயில் நேற்று நடைபெற்ற பேரணியில் பேசியதாவது: ஜம்மு-காஷ்மீரில் 370-வது சட்டப்பிரிவை ரத்து செய்து பால்தாக்கரே கண்ட கனவினை நனவாக்கியவர் பிரதமர் மோடி. அதேநேரம், பாஜக கூட்டணியை சுயநலத்துக்காக முறித்துக்கொண்டவர் உத்தவ் தாக்கரே.

தேர்தலில் வெற்றி பெறுவதற்கு மட்டும் பால் தாக்கரே மற்றும் பிரதமர் மோடியின் பெயர், படங்களை பயன்படுத்திக் கொண்டு தேர்தலில் வெற்றிபெற்றவுடன் காங்கிரஸுடன் கைகோர்த்துக் கொண்டு பாஜகவுடன் உறவை முறித்துக் கொண்டவர் உத்தவ். இதிலிருந்து, யார் உண்மையான துரோகிகள் என்பதை மக்கள் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு ஏக்நாத் ஷிண்டே பேசினார்.

SCROLL FOR NEXT