உஜ்ஜல் புயான், வெங்கட்டநாராயண பட்டி 
இந்தியா

உச்ச நீதிமன்றத்தில் புதிதாக 2 நீதிபதிகள் பதவியேற்பு: மொத்த எண்ணிக்கை 32 ஆக அதிகரிப்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தில் புதிதாக 2 நீதிபதிகள் பதவியேற்றுக் கொண்டனர். அவர்களையும் சேர்த்து நீதிபதிகளின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 34 ஆக உள்ளது. ஆனால், 30 நீதிபதிகள் மட்டுமே பணியில் இருந்தனர். 4 இடங்கள் காலியாக இருந்தன. இந்நிலையில், தெலங்கானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி உஜ்ஜல் புயான் மற்றும் கேரள உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வெங்கட்ட நாராயண பட்டி ஆகியோரின் பெயர்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டன.

கடந்த 5-ம் தேதி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான கொலீஜியம் அதற்கான பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்பியது. அதை ஏற்று இருவரையும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்படுவதாக மத்திய சட்டத் துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வால் கடந்த புதன்கிழமை அறிவித்தார். இதையடுத்து,உஜ்ஜல் புயான் மற்றும் வெங்கட்டநாராயண பட்டி ஆகிய இருவரும், உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நேற்று பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி சந்திரசூட் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 1964 ஆகஸ்ட் 2-ம் தேதி பிறந்தவர் நீதிபதி உஜ்ஜல் புயான். கடந்த 2011-ம் ஆண்டு குவாஹாட்டி உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். கடந்த 2022 ஜூன் 28-ம் தேதி முதல் தெலங்கானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்த புயான், தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 1962-ம் ஆண்டு மே 6-ம் தேதி பிறந்தவர் நீதிபதி வெங்கட்ட நாராயண பட்டி. ஆந்திர உயர் நீதிமன்ற நீதிபதியாக கடந்த 2013-ம் ஆண்டு ஏப்ரல் 12-ம் தேதி நியமிக்கப்பட்டார். அதன்பின் கடந்த 2019-ம் ஆண்டு கேரள உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார். அங்கு கடந்த 2023 ஜூன் 1-ம் தேதி முதல் தலைமை நீதிபதியாக பணியாற்றினார்.

ஆந்திர மாநிலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்த கடந்த 2022-ம் ஆண்டு முதல் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் யாரும் இல்லை. அதை சரி செய்யும் வகையில் பட்டியை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கலாம் என்று கொலீஜியம் பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதியாக பட்டி நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT