லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தை சேர்ந்தவர் சதாம் ஷேக். பெங்களூருவில் உள்ள ஒரு நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். சமூக ஊடக கண்காணிப்பின்போது, பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளுடன் இவர் தொடர்பில் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து உ.பி. தீவிரவாத எதிர்ப்பு படை (ஏடிஎஸ்) போலீஸார் கடந்த 2-ம் தேதி, லக்னோ நகரில் இவரை கைது செய்து விசாரித்து வந்தனர்.
இதுகுறித்து உ.பி. காவல்துறை கூடுதல் இயக்குநர் நவீன் அரோரா நேற்று கூறியதாவது: சதாம் ஷேக் தற்போது ஏடிஎஸ் காவலில் இருந்து வருகிறார். அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். கடந்த காலங்களில் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியில் மக்கள் கூட்டத்தில் லாரியை மோதி தாக்குதல் நடத்தப்பட்டது போன்று நம் நாட்டிலும் தாக்குதல் நடத்த சதாம் திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
முற்றிலும் மூளைச் சலவை செய்யப்பட்டுள்ள சதாம், உளவியல் ரீதியாக இந்த தாக்குதலுக்கு தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருந்தார். தனது வாகனத்தையே பயங்கர ஆயுதமாக பயன்படுத்த திட்டமிட்ட அவர், லாரியை மோதி தாக்குதல் நடத்தும் வீடியோக்களை தினமும் பார்த்து வந்துள்ளார்.
ஒசாமா பின்லேடன், ஜாகிர் மூசா, ரியாஸ் நைக்கூ, நவேத் ஜாட்,சமீர் டைகர் போன்ற தீவிரவாதிகளிடம் இருந்து தான் உத்வேகம் பெற்றதாக சதாம் ஷேக் கூறுகிறார். அவரது மொபைல் போனில்இருந்து இந்த தீவிரவாதிகளின் வீடியோக்களை கைப்பற்றியுள்ளோம். இந்த மொபைல் போனைதடயவியல் ஆய்வுக்கு அனுப்பியுள்ளோம். இவ்வாறு கூடுதல் டிஜிபி நவீன் அரோரா கூறினார்.
கடந்த 2016-ல் பிரான்ஸ் நீஸ் நகரில் தேசிய தின கொண்டாட்டத்தின் போது ஐஎஸ் தீவிரவாதி லாரியை வேகமாக ஓட்டிவந்து மக்கள் கூட்டத்தில் மோதினார். இதில் 10 குழந்தைகள் உட்பட 84 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.