துணை முதல்வர் நாராயணசாமி 
இந்தியா

துணை முதல்வரை கேள்வி கேட்ட போலீஸ்காரர் பணியிடை நீக்கம்

என். மகேஷ்குமார்

திருப்பதி: ஆந்திர அரசு ‘வீட்டிற்கு வீடு நம் ஆட்சி’ எனும் பெயரில் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி, அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் என அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் அவரவர் தொகுதிகளில் மக்களை வீடுவீடாக சென்று அவர்களின் பிரச்சினையை கேட்டறிய வேண்டும். பிரச்சினை இருந்தால், அதை அரசு அதிகாரிகளின் பார்வைக்கு கொண்டு சென்று சரி செய்ய வேண்டும்.

இந்நிலையில், துணை முதல்வர் நாராயணசாமி, சித்தூர் மாவட்டம், குண்ட்ராஜு இன்லு எனும் கிராமத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது, திருப்பதி ஆயுதப்படை கான்ஸ்டபிள் யுகேந்திரன், கிராமத்தில் உள்ள சாலை குறித்து துணை முதல்வரின் பார்வைக்கு கொண்டுபோனார். கடந்த 4 ஆண்டுகளாக இந்த சாலை குண்டும், குழியுமாகவே உள்ளது என குறைகளை எடுத்து கூறினார்.இதனால் ஆத்திரமடைந்த துணை முதல்வர் நாராயணசாமி, யுகேந்திரனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

துணை முதல்வரையே கேள்வி கேட்கும் அளவிற்கு தைரியம் வந்துவிட்டதா என மக்கள் முன்பாகவே நாராயணசாமி ஆவேசப்பட்டார். அதன் பின்னர் அதிகாரிகள் அவரை அங்கிருந்து அழைத்து சென்றனர். பின்னர், இது தொடர்பாக சம்மந்தப்பட்ட போலீஸ்காரர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென துணை முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டார். அதன்பேரில் வெள்ளிக்கிழமை இரவு போலீஸ்காரர் யுகேந்திரனை சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT