புதுடெல்லி: எம்.பி. பதவி தகுதியிழப்பு விவகாரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி சட்ட ஆலோசனை பெறுவதற்காக தலைமைத் தேர்தல் ஆணையம் கால அவகாசத்தைக் கொடுத்துள்ளது.
அவமதிப்பு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை பெற்றதால் கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதி எம்.பி. பதவியிலிருந்து ராகுல் காந்தி தகுதியிழப்பு செய்யப்பட்டார். இதை எதிர்த்து சூரத் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மனு தாக்கல் செய்தார். அங்கு மனு விசாரணைக்கு ஏற்க மறுக்கப்பட்டதால் குஜராத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் ராகுல்.
மனுவை விசாரித்த குஜராத் நீதிமன்றம், ராகுலுக்கு அளிக்கப்பட்ட தண்டனை சரியானது என்று தீர்ப்பு வழங்கியது.
இந்நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் ராகுல்மனு தாக்கல் செய்வார் என தெரிகிறது. இதுதொடர்பாக காங்கிரஸ் மேலிடம் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறது. குஜராத் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யாமல், நேரடியாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த மார்ச் 23-ம்தேதி, ராகுலின் எம்.பி. பதவி தகுதியிழப்பு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. எனவே அடுத்த6 மாதத்துக்குள் காலியாகவுள்ள தொகுதிக்கு தேர்தலை நடத்த வேண்டும் என்பது விதியாகும்.
அப்படியானால் வரும் செப்டம்பர் 22-ம் தேதிக்குள் தேர்தல் நடத்த வேண்டும். அதேநேரத்தில் இந்த மக்களவையின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஏப்ரல் வரை மட்டுமே உள்ளது. எனவே, இடைப்பட்ட காலம் ஓராண்டுக்குள் இருப்பதால் இடைத்தேர்தல் நடத்துவதிலும் சிக்கல் இருக்கிறது. ஓராண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட காலம் இருந்தால் மட்டுமே இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது விதியாகும்.
எனவே, இந்த விஷயத்தில் ராகுல் காந்தி சட்ட ஆலோசனை பெறுவதற்காக கால அவகாசத்தை தலைமைத் தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.
இடைத்தேர்தல் நடத்துவதில் எந்த அவசரமும் இல்லை என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் ஏற்கெனவே கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்பு லட்சத்தீவு தொகுதி எம்.பி. முகமது ஃபைசலின் பதவி தகுதியிழப்பு செய்யப்பட்டபோது அந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தலை, தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால், பைசல்பதவி தகுதியிழப்பு செய்யப்பட்டதை கேரள உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. இதையடுத்து அவரது எம்.பி. பதவி தப்பியது.
எனவே, உச்ச நீதிமன்றத்தில் ராகுல் தரப்பில் மனு தாக்கல் செய்யப்படுவதற்காக தேர்தல் ஆணையம் காத்திருப்பதாகத் தெரியவந்துள்ளது.