இந்தியா

பிஹார் பாஜக முதல்வர் வேட்பாளர் யார்?: நான்கு தலைவர்களிடையே கடும் போட்டி

ஆர்.ஷபிமுன்னா

பிஹார் மாநில சட்டசபைக்கான அடுத்த தேர்தலில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் பாரதிய ஜனதா கட்சித் தலைவர்களிடையே கடும் போட்டி உருவாகி உள்ளது.

முன்னாள் துணை முதல்வர் சுசில்குமார் மோடி, மாநில கட்சித் தலைவர் மங்கள் பாண்டே, முன்னாள் மாநில அமைச்சர் பிரேம்குமார் மற்றும் கட்சியின் மூத்த தலைவர் நந்த கிஷோர் யாதவ் ஆகியோர் போட்டியில் உள்ளனர்.

பிஹாரில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்த லாலு பிரசாத யாதவின் ராஷ்டிரிய ஜனதா தள கட்சியை தோற்கடித்து, 2005-ம் ஆண்டு ஆட்சியைப் பிடித்தது ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக கூட்டணி.

2010-ல் நடைபெற்ற சட்டசபை தேர்தலிலும் 2-வது முறையாக இந்தக் கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்தது. எனினும், பாஜக பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டதையடுத்து, கூட்டணியிலிருந்து ஐக்கிய ஜனதா தளம் வெளியேறியது. இதனால் அடுத்த தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட தயாராகி வருகிறது.

இந்நிலையில், பாஜகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்த விவாதம் தொடங்கி உள்ளது. தொடக்கத்தில் சுசில்குமார் மோடி முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என கூறப்பட்டது.

சமீபத்தில் பாட்னாவில் நடைபெற்ற பாஜகவின் மாநில செயற்குழு கூட்டத்தில், முதல்வர் வேட்பாளராக சுசில்குமார் மோடியை அறிவிக்கலாம் என மத்திய அமைச்சர்கள் ரவிசங்கர் பிரசாத் மற்றும் ராதா மோகன் சிங் ஆகியோர் கருத்து தெரிவித்தனர். இதையடுத்து அந்த பொறுப்புக்கு கடும் போட்டி தொடங்கி விட்டது.

இது பற்றி ‘தி இந்து’விடம் பிஹார் மாநில பாஜக தலைவர்கள் வட்டாரம் கூறும்போது, “செயற்குழு கூட்டத்தில் மாநில கட்சித் தலைவர் மங்கள் பாண்டேவின் பெயரை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தினர்.

இதுபோல் பிரேம் குமார் மற்றும் நந்த கிஷோர் யாதவ் ஆகியோரின் பெயர்களையும் அவர்களின் ஆதரவாளர்கள் பரிந்துரைத்தனர். எனவே இந்த விஷயத்தில் கட்சியின் ஆட்சிமன்றக்குழு விரைவில் முடிவு செய்யவில்லை எனில், அது தேர்தலின்போது கட்சிக்கு தலைவலியை ஏற்படுத்தும்” என தெரிவித்தனர்.

இதற்கிடையே, நந்த கிஷோர் யாதவ் தனது திரையரங்கின் தேநீர் விடுதியில் பலமுறை தேநீர் விற்பனை செய்துள்ளதாகவும், அவரை முன்னிறுத்தினால் பிரதமர் நரேந்திர மோடியைப்போல் வெற்றி பெறுவார் என்றும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டு மக்களவைத் தேர்தலில் தனித்து போட்டியிட்டு படுதோல்வி அடைந்ததால், தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் நிதிஷ் குமார். தனக்கு அடுத்தபடியாக ஜிதன்ராம் மாஞ்சியை முதல்வராக்கினார். ஐக்கிய ஜனதா தளத்துக்கு பெரும்பான்மை இல்லாததால், மாஞ்சி தலைமையிலான அரசுக்கு காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், இந்தியக் குடியரசு கட்சி மற்றும் சுயேச்சைகள் ஆதரவளித்து வருகின்றன.

எனவே, எந்த நேரமும் ஐக்கிய ஜனதா தள ஆட்சி கவிழ்ந்து தேர்தல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிஹார் சட்டசபையின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு நவம்பரில் முடிய உள்ளது. இந்நிலையில், அங்கு காலியாக உள்ள 10 தொகுதிகளுக்கு ஆகஸ்ட் 21-ல் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

SCROLL FOR NEXT