இந்தியா

எதிர்க்கட்சிகளை பாஜக நெருக்கடிக்குள் தள்ளுவது எப்படி? - ஓர் அலசல்

பால. மோகன்தாஸ்

மகாராஷ்டிராவில் சிவசேனாவைத் தொடர்ந்து தற்போது தேசியவாத காங்கிரஸ் கட்சியும் பிளவுபட்டிருக்கிறது. இந்தப் பிளவின் பின்னணியில் பாஜக இருந்தது என்று சொல்வதில் எந்த ஆச்சரியமும் இருக்க முடியாது. அதேநேரத்தில், இத்தகைய பிளவுகளை பாஜகவால் எவ்வாறு செய்ய முடிகிறது என்ற கேள்வி ஆச்சரியம் மிகுந்தது. ஒலிம்பிக்கில் இடம் பெறாத இந்த அரசியல் விளையாட்டை பாஜக எவ்வாறு வெற்றிகரமாக விளையாடுகிறது? எதிர் அணியின் விக்கெட்டுகள் எவ்வாறு ஒன்றன் பின் ஒன்றாக வீழ்கின்றன? பாஜகவின் வெற்றிக்குக் காரணமாக இருக்கும் அதன் வியூகங்கள் எவையெவை? - சற்றே விரிவாகப் பார்ப்போம்.

அடுத்த மக்களவைத் தேர்தல் வேகமாக நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் மிக முக்கியமான நாளாக அரசியல் கட்சிகளுக்கு மாறத் தொடங்கி இருக்கிறது. தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியில் இருக்கும் பாஜகவை குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடியை எப்படியாவது அதிகாரத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்ற முனைப்பில் எதிர்க்கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. அதற்கேற்ப அவை வியூகம் வகுத்து செயல்பட்டு வருகின்றன. எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பதற்கான முதல் கூட்டம் கடந்த ஜூன் 23-ம் தேதி பிஹார் தலைநகர் பாட்னாவில் நடந்தேறியது.

அதேநேரத்தில், எதிர்க்கட்சிகளுக்கு எதிரான வியூகத்தை பாஜகவும் தீவிரப்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை ஒருங்கிணைத்த பிஹார் முதல்வரின் அணியில் இருந்த பிகார் முன்னாள் முதல்வர் ஜிதன் ராம் மஞ்சி, ஜூன் 22-ம் தேதி பாஜக அணியில் இணைந்தார். ஏற்கனவே சிவசேனா பிளவு பட்டு ஓர் அணி பாஜகவோடு கூட்டணி அமைத்த நிலையில், தற்போது தேசியவாத காங்கிரஸ் கட்சியும் பிளவுபட்டு அதன் ஒரு பிரிவு பாஜகவோடு கூட்டணி சேர்ந்திருக்கிறது. தேசிய அரசியலில் ஏற்பட்டு வரும் இத்தகைய மாற்றங்கள், தங்களை வீழ்த்துவது அத்தனை எளிதல்ல என்ற செய்தியை எதிர்க்கட்சிகளுக்கு பாஜக உரக்கச் சொல்வதன் வெளிப்பாடு என்று சொன்னால் அது மிகையல்ல. பாஜக களத்தில் வலிமையாக இருந்து கொண்டு எதிரணியை பந்தாடுகிறதா என்ற கேள்வி இதன் ஊடாக எழுகிறது. பாஜகவின் இத்தகைய அடித்தாடும் ஆட்டத்தின் பின்னால் மூன்று முக்கிய வியூகங்கள் இருப்பதை சுட்டிக்காட்ட முடியும்.

முதல் வியூகம்: ஊழல் குற்றச்சாட்டுக்கள் எவையும் நிரூபிக்கப்படாத வகையிலான ஆட்சி முறைதான் பாஜகவின் முதல் வியூகம். ரஃபேல் போர் விமானங்களை பிரான்சிடம் இருந்து கொள்முதல் செய்ததில் ஊழல் நடந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தன. இது குறித்து உச்ச நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரி முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி, வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி கே.எம். ஜோசப் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

விசாரணையின் முடிவில் தீர்ப்பளித்த நீதிபதிகள், "ரஃபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்வதில் பின்பற்றப்பட்ட நடைமுறைகள் திருப்தி அளிக்கின்றன. சந்தேகம் கொள்வதற்கு இடம் இல்லை என்பதில் நாங்கள் திருப்தி கொள்கிறோம்" என கூறி, மனுக்களை தள்ளுபடி செய்தனர். சட்ட ரீதியாக நெருக்கடிக்குள் தள்ள முடியாத அளவுக்கு இந்த அரசு எவ்வளவு கவனமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதற்கு இந்த வழக்கு ஓர் உதாரணம். கடந்த 9 ஆண்டுகளில் நரேந்திர மோடி அரசுக்கு எதிராக இதுவரை ஒரு ஊழல் குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை.

ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்பதால் ஊழல் நடக்கவே இல்லை என்று சொல்லிவிட முடியுமா என்ற கேள்வி அர்த்தம் நிறைந்தது. இந்தக் கேள்விக்கு நாம் விடை காண வேண்டுமானால், வேறு சில கேள்விகளை எழுப்பினால்தான் விடை கிடைக்கும். ஓர் அரசு, ஊழல் செய்வதற்கு நடைமுறையில் இருக்கும் வாய்ப்புகளை அப்படியே தொடர அனுமதிக்கிறதா, புதிதாக ஊழல் புரிவதற்கான வாய்ப்புகளை உருவாக்குகிறதா, ஊழல் உருவாவதற்கான ஓட்டைகளை அடைப்பதில் உண்மையாக முனைப்பு காட்டுகிறதா, ஊழல்புரிந்தவர்களுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கிறதா, ஆட்சியாளர்களின் சொல்லும் செயலும் எவ்வாறு இருக்கின்றன ஆகிய கேள்விகளுக்கான விடைகளில்தான், முந்தைய கேள்விக்கான விடை இருக்கிறது.

"அரசு திட்டப் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக பணத்தை செலுத்துவது, டிஜிட்டல் பரிவர்த்தனை, உயர் மதிப்பு ரூபாய் நோட்டுக்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஊழல்வாதிகளுக்கு எதிராக வருமான வரித்துறை, அமலாக்கத் துறை ஆகியவற்றின் மூலம் எடுக்கப்படும் சட்ட நடவடிக்கை, தேவையற்ற 2 ஆயிரம் சட்டங்களை ரத்து செய்தது, ஒப்பந்தம் போடுவது முதல் டெண்டர் விடுவது வரை அனைத்திலும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுப்பது, ஆட்சிக்கு வந்த பிறகும் ஊழலுக்கு எதிராக தொடர்ந்து பேசுவது" போன்ற தங்கள் அரசின் செயல்பாடுகளை பாஜக இதற்கு பதிலாக அளித்து வருகிறது.

அதேநேரத்தில், அம்பானி, அதானி உள்ளிட்ட கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மத்திய அரசு சாதகமாக செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டை காங்கிரஸ் குறிப்பாக ராகுல் காந்தி தொடர்ந்து முன்வைத்து வருகிறார். மத்திய ஆட்சியாளர்கள் ஊழல் வழக்குகளில் சிக்கவில்லை என்றாலும், அவர்கள் ஊழலுக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல என்ற விமர்சனமும் எதிர்க்கட்சிகளால் தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது. கர்நாடகாவில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக ஆட்சியை இழந்ததற்கு அக்கட்சி மீதான 40 சதவீத கமிஷன் அரசு என்ற ஊழல் குற்றச்சாட்டே பிரதான காரணம் என்ற வாதம் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளால் வைக்கப்படுகிறது. அதேநேரத்தில், பாஜக மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் உண்மைக்குப் புறம்பானவை; அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்ற பதிலின் மூலம் அக்கட்சி கடந்து செல்கிறது.

இரண்டாம் வியூகம்: ஆட்சி அதிகாரத்தின் மூலம் வளர்ச்சிப் பாதையில் நாட்டை இட்டுச் செல்வது, வளர்ச்சியை பரவலாக்குவது ஆகியவை பாஜகவின் இரண்டாவது வியூகம். "நரேந்திர மோடி அரசு போதுமான வளர்ச்சியை ஏற்படுத்தவில்லை என்ற எதிர்க்கட்சிகளின் விமர்சனம் புறக்கணிக்கத்தக்கதல்ல. அதேநேரத்தில், வளர்ச்சியை நோக்கி நாடு சென்று கொண்டிருக்கிறது; வளர்ச்சி பரவலாக்கப்பட்டுள்ளது எனும் பாஜகவின் பிரச்சாரம் நிராகரிக்கத்தக்கதல்ல" என்கின்றனர் சில அரசியல் ஆய்வாளர்கள். "உலக அளவில் 5-வது மிகப் பெரிய பொருளாதாரமாக நாடு உருவெடுத்துள்ளது. நாட்டில் கழிப்பறைகள் பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளன. 2014 ஏப்ரலில் 14.52 கோடியாக இருந்த சமையல் எரிவாயு இணைப்பு 2023 மார்ச்சில் 31.36 கோடியாக உயர்ந்திருக்கிறது. 2014-ல் 723 ஆக இருந்த பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை 2023-ல் 1,113 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 9 ஆண்டுகளில் புதிதாக 7 ஐஐடிக்கள், 7 ஐஐஎம்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

63.73 லட்சம் கிலோ மீட்டர் சாலைகளுடன், சாலை கட்டமைப்பில் உலகின் 2-வது பெரிய நாடாக இந்தியா முன்னேறி இருக்கிறது. 21,413 கிலோ மீட்டராக இருந்த ரயில்வே மின்மயமாக்கம், தற்போது 58,424 கிலோ மீட்டராக அதிகரிக்கப்பட்டு 90 சதவீத வழித்தடங்கள் மின்மயமாக்கப்பட்டுள்ளன. இதேபோல், 229 கிலோ மீட்டராக இருந்த மெட்ரோ ரயில் பாதை, தற்போது 860 கிலோ மீட்டராக உயர்த்தப்பட்டிருக்கிறது. 2014-ல் 6.1 கோடியாக இருந்த இணைய இணைப்பு, 2022 டிசம்பர் வரையிலான காலகட்டத்துக்குள் 83.22 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. புதிய தொழில் தொடங்குவதற்கு ஏற்ற சூழல் உள்ள நாடுகளில் இந்தியா 3-வது இடத்தை பிடித்துள்ளது. இந்தப் புள்ளி விவரங்கள் பாஜகவுக்கானது மட்டுமல்ல; நாட்டுக்கானதும்கூட. இத்தகைய புள்ளி விவரங்களைத் தாண்டி, நாடு தவிர்த்திருக்கும் பிரச்சினைகள், கண் முன் தெரியும் முன்னேற்றங்கள், நாட்டுக்கு சர்வதேச அளவில் கிடைத்திருக்கும் அங்கீகாரங்கள் போன்றவை ஒரு நாடாக நாம் உண்மையாகவே வளர்ந்திருக்கிறோம் என்ற நம்பிக்கையை இந்த அரசு ஏற்படுத்தி இருக்கிறது" என்கின்றனர் அவர்கள்.

அதேநேரத்தில், நாடு போதுமான வளர்ச்சியை அடையவில்லை; பல்வேறு அம்சங்களில் அது பின்தங்கி இருக்கிறது எனும் வாதமும் நாட்டில் ஓங்கி ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது. "நரேந்திர மோடியின் ஆட்சியில், அதானி, அம்பானி போன்ற தொழிலதிபர்களின் செல்வம் பல மடங்கு பெருகி இருக்கிறது. இந்த அரசின் கொள்கைகள் அவர்களுக்கே சாதகமாக இருக்கின்றன. ஏழைகளுக்கும் பணக்கார்களுக்குமான இடைவெளி மிகப் பெரிய அளவில் அதிகரித்திருக்கிறது. வேலைவாய்ப்பின்மை முன் எப்போதும் இல்லாத அளவு உயர்ந்திருக்கிறது. வளர்ச்சி பரவலாக்கப்படாததே இதற்குக் காரணம்" என்ற குற்றச்சாட்டு பாஜக மீது இருக்கிறது.

மூன்றாம் வியூகம்: மக்களை ஈர்க்கும் பணிகளைச் செய்வதன் மூலம் களத்தில் தனது வலிமையைப் பெருக்கிக் கொள்வதோடு, தனது அரசியல் எதிரிகளை தொடர்ந்து பலவீனப்படுத்துவது இந்த அரசின் மூன்றாவது மிகப்பெரிய வியூகம். "சிவ சேனாவை உடைத்து, மகாராஷ்டிராவில் ஆட்சியைப் பிடித்தது பாஜக. கோவாவில் காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு 'ஆசை' காட்டி ஆட்சி அமைத்தது பாஜக. நிதிஷ் குமார் கூட்டணியில் இருந்த ஜிதன் ராம் மஞ்சியை, திடீரென தங்கள் பக்கம் இழுத்தது பாஜக. எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக வருமான வரித்துறை, அமலாக்கத் துறை ஆகிய விசாரணை அமைப்புகள் மூலம் மிகப் பெரிய நெருக்கடி கொடுப்பது பாஜக. தங்கள் பக்கம் வந்துவிட்டால் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை அச்சுறுத்தல் நீங்கிவிடும் எனும் செய்தியை கொடுப்பது பாஜக. மத்தியில் ஆட்சியில் இருப்பதன் மூலம் தனக்கு இருக்கும் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவது பாஜக" என்ற குற்றச்சாட்டை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முன்வைக்கின்றன.

"வருமான வரித்துறை, அமலாக்கத் துறை ஆகிய அமைப்புகள் சுதந்திரமானவை. அவை புகார்களின் மீது நடவடிக்கைகளை எடுக்கின்றன. தவறு செய்யாதவர்களாக இருந்தால் இவர்கள் ஏன் இத்தகைய விசாரணைகளைக் கண்டு அஞ்ச வேண்டும். இவை ஒருபுறம் இருக்க, எதிர்க்கட்சித் தலைவர்களில் பலர் ஊழல் குற்றச்சாட்டுக்களில் நீதிமன்றத்தின் மூலம் ஜாமீன் பெற்றே வெளியே இருக்கிறார்கள்" என்கிறது பாஜக.

ஆளும் பாஜகவின் வாதத்திலும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் வாதத்திலும் உண்மையும், உண்மையைத் தாண்டிய அரசியலும் இருக்கத்தான் செய்கின்றன. "பெரும்பாலான எதிர்க்கட்சிகள் குடும்ப அரசியல் நடத்துகின்றன. ஆட்சி செய்வதற்கான வாய்ப்பு பல முறை கிடைத்தும் ஊழலை கட்டுப்படுத்த அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. அதோடு, அவர்களும் அதிக அளவில் ஊழலில் ஈடுபட்டுள்ளனர். அராஜகங்களில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் கடந்த கால நடவடிக்கைகள் அவர்களுக்கு மிகப் பெரிய சுமையாக மாறி இருக்கின்றன. அவர்களின் இந்த பலவீனத்தை ஆட்சியில் இருக்கும் பாஜக தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறது. அதிகாரம் அதன் வசம் இருப்பதால், குறைகள் நிறைந்த எதிர்க்கட்சிகளை பலவீனப்படுத்துவது அதற்கு எளிதாக இருக்கிறது" என்கின்றார் அரசியல் ஆய்வாளர் ஒருவர்.

எதிர்க்கட்சிகளைப் பலவீனப்படுத்தும் விஷயத்தில் பாஜக லட்சுமண ரேகையைத் தாண்டி செயல்படுகிறது என்பதில் சந்தேகம் இல்லை. அதேநேரத்தில், பல எதிர்க்கட்சிகள் பலவீனமான தன்மையில் தங்களை தகவமைத்துக்கொண்டிருப்பதையும் மறுப்பதற்கு இல்லை. சிவ சேனா உடைந்தது, தேசியவாத காங்கிரஸ் உடைந்தது என்று சொல்வதைவிட இவற்றை பாஜக உடைத்தது என்று சொல்வது பொருத்தமாகத்தான் இருக்கும். ஆனால், அதற்கான 'தகுதி'யுடன் அக்கட்சிகள் இருந்தன என்பதையும் மறுக்க முடியாது. கட்சிக்குள் ஜனநாயகத்தை வலுப்படுத்துவது, வாய்ப்புகளை பரவலாக்குவது, கொள்கை சார்ந்த அரசியலை உறுதியுடன் முன்னெடுப்பது போன்ற நடவடிக்கைகளில் அவை ஈடுபடுவதன் மூலமே அவை தன்னளவில் வலிமையைப் பெற முடியும். இவற்றின் மூலமே மூலமே அவை உண்மையான வலிமையை பெருக்கிக்கொள்ள முடியும். இதற்கு கட்சிக்குள் அடிப்படை மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியது அவசியம். பாஜகவை அதிகாரத்தில் இருந்து அகற்றுவதால் மட்டுமே எதிர்க்கட்சிகள் உண்மையான வலிமையை பெற்றுவிட முடியாது.

SCROLL FOR NEXT