பழங்குடி இளைஞரின் முகத்தில் சிறுநீர் கழித்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பிரவேஷ் சுக்லா. பாதிக்கப்பட்ட பழங்குடி இளைஞரின் கால்களை கழுவிய ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் சவுகான். 
இந்தியா

முகத்தில் சிறுநீர் கழித்து அவமானப்படுத்தப்பட்ட பழங்குடி இளைஞரின் கால்களை கழுவிய ம.பி. முதல்வர்

செய்திப்பிரிவு

போபால்: முகத்தில் சிறுநீர் கழிக்கப்பட்ட சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பழங்குடி இளைஞரின் கால்களை மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கழுவினார்.

மத்திய பிரதேச சமூக வலைதளங்களில் சில நாட்களுக்கு முன்பு ஒரு வீடியோ வைரலாக பரவியது. அதில், சிகரெட் பிடிக்கும் ஒரு நபர், பழங்குடி இளைஞரின் முகத்தில் சிறுநீர் கழிக்கும் காட்சி இடம்பெற்றிருந்தது. இதுதொடர்பாக சித்தி மாவட்டம், பஹ்ரி அருகேயுள்ள குப்ரி கிராமத்தை சேர்ந்த பிரவேஷ் சுக்லா என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம், எஸ்சி,எஸ்டி வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

பிரவேஷ் சுக்லாவுக்கு சொந்தமான வீடு பொக்லைன் மூலம் இடித்து தள்ளப்பட்டது. இந்த சூழலில் சிறுநீர் கழிக்கப்பட்ட சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பழங்குடி இளைஞர் தலைநகர் போபாலில் உள்ள முதல்வர் சிவராஜ் சிங்கின் வீட்டுக்கு நேற்று அழைத்து வரப்பட்டார். அந்த இளைஞருக்கு பொன்னாடை போர்த்தி முதல்வர் வரவேற்றார். விநாயகரின் சிலையை பரிசாக வழங்கினார்.

பழங்குடி இளைஞரின் கால்களை முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தண்ணீரை ஊற்றி கழுவினார். பின்னர் அவரோடு இணைந்து சாப்பிட்டார். அப்போது பழங்குடி இளைஞரிடம் முதல்வர் கூறியதாவது:

நடந்த சம்பவத்துக்காக வருத்தம் தெரிவித்து கொள்கிறேன். பழங்குடி மக்களை நான் கடவுளாக மதிக்கிறேன். தவறிழைத்தவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ்வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது வீடு தரைமட்டமாக்கப்பட்டு உள்ளது.

பாதிக்கப்பட்ட பழங்குடி இளைஞர் எனது தம்பி போன்றவர். அவருக்கு புதிய வீடு கட்டிக் கொடுக்கப்படும். அவர் தொழில் தொடங்கஅரசு சார்பில் உதவி வழங்கப்படும்.

இவ்வாறு முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT