குஜராத் மாநிலம் நரோடா பாட்டியா வன்முறைச் சம்பவம் தொடர்பாக 28 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட குஜராத் முன்னாள் அமைச்சர் மாயா கோட்னானிக்கு குஜராத் உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
வழக்கு விவரம்
குஜராத் மாநிலத்தில் கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்துக்கு அடுத்த நாள், 2002-ம் ஆண்டு பிப்ரவரி 28-ம் தேதி நரோடா பாட்டியா என்ற இடத்தில் மிகப் பெரிய வன்முறை வெடித்தது. இதில் 97 சிறுபான்மையினர் கொல்லப்பட்டனர். இது தொடர்பான வழக்கில் நரேந்திர மோடி அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த மாயா கோட்னானி, முன்னாள் விஸ்வ இந்து பரிஷத் தலைவர் பாபு பஜ்ரங்கி உள்பட 70 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது.
வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம், கடந்த 2012-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கோட்னானி, பஜ்ரங்கி உட்பட 32 பேர் குற்ற வாளிகள் என தீர்ப்பளித்தது. இதில் கோட்னானிக்கு 28 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
ஜாமீன்
இதனிடையே, சபர்மதி சிறையில் அடைக்கப்பட்டிருந்த கோட்னானி உடல்நலக்குறைவைக் காரணம் காட்டி ஜாமீன் கோரியிருந்தார். இம்மனு, நீதிபதிகள் வி.எம்.சஹாய், ஆர்.பி. டோலாரியா ஆகியோரடங்கிய அமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. கோட்னானிக்கு ஒரு லட்சம் ரூபாய் பிணையத்தில் நீதிபதிகள் ஜாமீன் வழங்கினர். ஜாமீன் காலத்தின்போது, காவல் நிலையத்தில் ஆஜராவதற்கும் விலக்களித்தனர்.
கோட்னானி தனக்கு காசநோய் (டி.பி) மற்றும் மன அழுத்தம் இருப்பதாக தனது மனுவில் தெரிவித்திருந்தார். தனக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து, 2012 –ம் ஆண்டு டிசம் பரில் உயர் நீதின்றத்தில் மாயா கோட்னானி மேல்முறையீடு செய்திருந்தார். அம்மனு விசா ரணைக்கு ஏற்கப்படாமல் நிலுவையில் உள்ளது. அம்மனு தற்போதைக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாது என்பதையும் கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கடந்த ஏப்ரலில், கோட்னா னிக்கு தற்காலிக ஜாமீன் வழங் கப்பட்டது. ஆனால், அது நீட்டிக்கப் படவில்லை.-பிடிஐ