ஆதார் அட்டையுடன் இணைந்த நேரடி மானிய உதவி அளிக்கும் திட்டத்தின் பயன் மற்றும் செயல்பாடு குறித்து மத்திய அரசு ஆய்வு செய்து வருகிறது.
இந்த திட்டத்தின் செயல்பாடு பற்றிய அறிக்கையை திட்டக்குழுவும் ஆதார் ஆணையமும் இணைந்து தயாரித்து வருகின்றன. இதுதொடர்பான அறிக்கையை வரும் ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் மத்திய அரசிடம் அளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆதார் அட்டை பெற்றவர்களுக்கு நேரடியாக சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியம் வழங்கும் திட்டம், 18 மாநிலங்களில் உள்ள 289 மாவட்டங்களில் அமல்படுத்தப்பட்டிருந்தது. பயனாளிகளின் வங்கிக் கணக்கில் ஒரு சிலிண்டருக்கான மானியத் தொகை ரூ.435 செலுத்தப்பட்டு வந்தது.
ஆனால், ஆதார் அட்டை பெறாதவர்களும், வங்கிக்கணக்குடன் ஆதார் அட்டையை இணைக்காதவர்களும் மானியத் தொகையை பெற முடியவில்லை என பரவலாக புகார் எழுந்தது. இதையடுத்து முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசு, நேரடி மானிய உதவித்திட்டத்தை கடந்த ஜனவரி 30-ம் தேதி நிறுத்திவைத்தது.
இதற்கிடையே ஆதார் அட்டை தொடர்பான ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் வெளியிட்ட இடைக்கால உத்தரவில், “அரசின் மானிய உதவித் திட்டத்தின் கீழ் பயன்பெறுவோர், ஆதார் அட்டையை பெற வேண்டும் என்று கட்டாயப்படுத்தக்கூடாது என்று கூறியிருந்தது.
எனவே, ஆதாருடன் கூடிய நேரடி மானிய உதவித் திட்டத்தை மீண்டும் கொண்டு வர மத்திய அரசு விரும்பினால், உச்ச நீதிமன்றத்தை அணுகி, இந்த வழக்கில் தனக்கு சாதகமாக தீர்ப்பு பெற வேண்டும் என்று சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.