ஹைதராபாத்: தெலங்கானாவில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இந்த ஆண்டு 900 எம்பிபிஎஸ் இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அமைச்சர் ஹரீஷ் ராவ் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
தெலங்கானா மாநில மருத்துவம் மற்றும் நிதித்துறை அமைச்சர் ஹரீஷ் ராவ் நேற்று தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் 2023-24-ம் கல்வி ஆண்டில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2,118 எம்பிபிஎஸ் இடங்கள் அதிகரித்துள்ளன. இதில் தெலங்கானாவில் மட்டும் 900 இடங்கள் அதிகரித்துள்ளன. இது, நாடு முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலாக சேர்க்கப்பட்ட இடங்களில் 43 சதவீதம் ஆகும். இதை பகிர்ந்து கொள்வதில் பெருமிதம் அடைகிறேன்.
தெலங்கானாவில் மாவட்டத்திற்கு ஒரு அரசு மருத்துவக் கல்லூரி நிறுவ திட்டமிடப்பட்டுள் ளது. அது ஏறக்குறைய நிறை வேறும் நிலையில் உள்ளது. இவ்வாறு அமைச்சர் ஹரீஷ் ராவ் தெரிவித்துள்ளார்.
100 சதவீத இடங்கள்: முன்னதாக, தெலங்கானா மாநில மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை விதிகளில் திருத்தம் செய்து புதிய அரசாணை ஒன்றை தெலங்கானா அரசு வெளியிட்டது.
தெலங்கானாவில் 2014, ஜூன் 2-ம் தேதிக்கு பிறகு (தெலங்கானா உதயமான பிறகு) தொடங்கப்பட்ட தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ்படிப்புகளுக்கான நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் அனைத்திலும் இனி தெலங்கானா மாணவர்களையே சேர்க்க வேண்டும் என அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
அதாவது நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் தெலங்கானா மாணவர்களுக்கான ஒதுக்கீடு 85 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தெலங்கானாவை சேர்ந்தவர்களுக்கு கூடுதலாக 1,820 இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.
இது புதிதாக 18 மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்கு சமமானது என கூறப்படுகிறது.