இந்தியா

திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் புலிகளுக்கான பாதை அமைக்க முடிவு - பாதுகாப்பு வழங்க ஆந்திர அரசுக்கு பக்தர்கள் கோரிக்கை

என்.மகேஷ்குமார்

திருப்பதி: ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் நல்லமலை எனும் அடர்ந்த வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியில்தான் முன்னாள் முதல்வர் ஒய்எஸ். ராஜசேகர் ரெட்டி சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி அவர் உயிரிழந்தார். இங்கு புலிகளின் நடமாட்டமும் உள்ளது.

இந்நிலையில், பத்வேல் வழியாக புலிகள் பாதை அமைத்து அவற்றை திருப்பதி சேஷாசலம் வனப்பகுதிக்கு அனுப்பினால், நல்லமலை பகுதியில் புலிகள் மேலும் சுதந்திரமாக உலாவும் என ஆந்திர வனத்துறை அதிகாரி மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அரசுக்கு தெரியப்படுத்தியதாவும், உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, புலிகள் சேஷாசலம் வனப்பகுதி வரை செல்ல நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்றும் ஆந்திர அரசு அனுமதி வழங்கியுள்ளதாக மதுசூதன் ரெட்டி தெரிவித்தார். இதுகுறித்து திருப்பதி தேவஸ்தானத்திற்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால், சேஷாசலம் வனப்பகுதியில் சிறுத்தைகள், கரடிகள், யானைகள் போன்ற விலங்குகளே இரவு நேரத்தில் உலாவுகின்றன. இவற்றுக்கான பாதைகளும் வனப்பகுதிகளில் உள்ளன. ஆனாலும், அவ்வப்போது, இவை இரை தேடி மக்கள், மலைக்குச் செல்லும் பக்தர்கள் நடமாடும் பகுதிக்குள் வந்துவிடுகின்றன.

சமீபத்தில் கூட 3 வயது சிறுவனை சிறுத்தை கவ்விச் சென்றது. ஆனால், அங்கே இருந்தவர்கள் எழுப்பிய அலறல் சத்தத்தால், சிறுத்தை பயந்துபோய், சிறுவனை வாயில் இருந்து கீழே போட்டுவிட்டு தப்பியது. இந்தச் சூழ்நிலையில், புலிகள், சேஷாசலம் வனப்பகுதியில் நடமாட ஆரம்பித்து விட்டால், பக்தர்களின் கதி என்னாவது என்பதே அனைவரின் பீதியாக உள்ளது.

24 மணி நேர கண்காணிப்பு: முதலில் அலிபிரி மற்றும் ஸ்ரீவாரி மெட்டு ஆகிய 2 மார்க்கங்களிலும் நடைபாதை முழுவதும் இருபுறமும் முழு அளவில் வேலி அமைக்க வேண்டும். ஆங்காங்கே 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய பாதுகாவலர்கள் இருப்பதும் அவசியம்.

மேலும் மலைப்பாதை முழுவதும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். அப்போதுதான் தைரியமாக திருமலைக்கு நடந்து சென்று நேர்த்திக்கடன் செலுத்த முடியும் என்பது பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

SCROLL FOR NEXT