பெங்களூர் பள்ளிச் சிறுமி பலாத்கார வழக்கில், அப்பள்ளியின் நிறுவன தலைவர் ருஸ்டன் கேரவல்லாவை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். மேலும் இவ்வழக்கில் 4 பள்ளி ஊழியர்கள் கைதாக வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.
பெங்களூரில் ‘விப்ஜியார்' தனியார் பள்ளியில் முதலாம் வகுப்பு படித்த 6 வயது சிறுமி, அப்பள்ளியின் ஸ்கேட்டிங் பயிற்றுநர் முஸ்தபா(30) என்பவரால் கடந்த 2-ம் தேதி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. குற்றம்சாட்டப்பட்ட முஸ்தபா ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார். பள்ளி வளாகத்தில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் காவல்துறைக்கு ஒத்து ழைப்பு அளிக்காமல், தவறான தகவல் களை தந்த ‘விப்ஜியார்' தனியார் பள்ளியின் நிறுவனர் தலைவர் ருஸ்டம் கேரவல்லா மீது வர்தூர் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த அவரை பெங்களூர் போலீஸார் புதன்கிழமை காலை டையூ-டாமனில் கைது செய்தனர். இது தொடர்பாக பெங்களூர் மாநகர காவல்துறை ஆணையர் எம்.என்.ரெட்டி கூறும் போது, “6-வயது மாணவி பலாத்கார வழக்கில் அப்பள்ளியின் நிர்வாகம் போலீஸாருக்கு உரிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை.
குற்றம் இழைத்த ஊழியர்களை காப்பாற்றும் விதத்தில், உண்மையை மூடி மறைக்க முற்பட்டது. பள்ளியின் நிறுவனத்தலைவர் ருஸ்டம் கேரவல்லா தொடர்ந்து தவறான தகவல்களை தந்து போலீஸாரை திசைத்திருப்ப முயற்சித்தார். பள்ளி நிர்வாகத்தின் மெத்தனப் போக்கே சிறுமியின் பலாத்காரத்திற்கு காரணம் என்பதை பகிரங்கமாகவே எதிர்த்தார். இதனால் பல பெற்றோர்கள் அவர் மீது புகார் அளித்தனர். அவர் மீது இந்திய தண்டனை சட்டம் 201-ம் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்திருக்கிறோம்''என்றார்.
28-ம் தேதி பள்ளி திறப்பு
விப்ஜியார் பள்ளி கடந்த 10 நாட்களாக மூடப்பட்டுள்ளது.பள்ளியை மீண்டும் திறக்க பொதுமக்களும் மாணவ அமைப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், வரும் 28-ம் தேதி மீண்டும் திறக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்பள்ளியில் படிக்கும் 3,000-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளதாக கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
இவ்வழக்கில், மேலும் 4 பேரை பெங்களூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர். அவர்களில் ஒருவர் அந்த பள்ளி மாணவிக்கு சில மாதங்களுக்கு முன் பாலியல் தொல்லை கொடுத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மற்ற மூவரும் பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோரை மிரட்டியது, உண்மையை மறைக்க முயன்றது ஆகிய குற்றச்சாட்டுகளில் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது.