காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு, அரசியலில் எதிர்துருவமாக இருக்கும் அவரது சகோதரர் வருண் காந்தி பாராட்டு தெரிவித்துள்ளார்.
சுல்தான்பூர் தொகுதி பாஜக வேட்பாளரான வருண் காந்தி, செவ்வாய்க்கிழமை மாலை தனது தொகுதியில் ஆசிரியர்கள் மத்தியில் பேசுகையில், "ராகுல் காந்தி தனது அமேதி தொகுதியில் சுயஉதவி குழுக்கள் மூலம் பெண்களின் சமூக அந்தஸ்தை உயர்த்தும் பணியை சிறப்பாக செய்துள்ளார். அதேபோல இம் மாவட்டத்தில் நானும் செய்ய விரும்புகிறேன்" என்றார்.
இதுகுறித்து ரேபரேலியில் ராகுலிடம் கேட்டபோது, "வருண் சொல்வது சரியே. அமேதியில் நடைபெற்றுள்ள பணிகளை மற்றவர்கள் பாராட்டும்போது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. அமேதியில் திட்டமிட்டபடி நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். கல்வி நிறுவனம், உணவுப் பூங்கா, விவசாயிகளுக்கான நலப் பணிகள் என பலவற்றையும் செய்துள்ளோம். கல்வி மற்றும் வேளாண் வளர்ச்சிப் பணிகளில் நாங்கள் தொடர்ந்து ஈடுபடுவோம்" என்றார்.
அமேதியில் பாஜக சார்பில் ஸ்மிருதி ராணி போட்டியிடுவதால் ஏற்படும் தாக்கம் குறித்து நிருபர்கள் கேட்டதற்கு, "இதற்கு அமேதி மக்கள்தான் பதில் அளிக்க வேண்டும்" என்றார் ராகுல்.