இந்தியா

பிஹார் சட்டமன்ற இடைத் தேர்தலை சந்திக்க இடதுசாரி கட்சிகள் கூட்டணி

செய்திப்பிரிவு

பிஹாரில் காலியாக உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளுக்கு வரும் 21-ம் தேதி நடக்கவுள்ள இடைத்தேர்தலை எதிர்கொள்ள இடதுசாரி கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன.

மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி 5 தொகுதிகளிலும் மார்க்சிஸ்ட் கட்சி 3 தொகுதிகளிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2 தொகுதிகளிலும் போட்டியிடும். இந்த தகவலை செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் மூன்று கட்சிகளின் மாநில செயலர்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.

மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி நர்கதியாகஞ்ச், ராஜ்நகர் (தனி) பாகல்பூர்,ஹாஜிபூர், மகானியா (தனி) தொகுதிகளில் போட்டியிடும். மார்க்சிஸ்ட் கட்சி சாப்ரா, மொகியுதீன் நகர், பார்பட்டா ஆகிய தொகுதிகளிலும், ஜலே, பங்கா ஆகிய தொகுதிகளில் கம்யூனிஸ்ட் கட்சியும் போட்டியிடும் என மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் விஜய் காந்த் தாக்குர் கூறினார்.

முதல்தடவையாக இடதுசாரிகள் இப்போதுதான் முழுமையான கூட்டணி அமைத்துள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ராஜேந்திர பிரசாத் சிங் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:

இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் மூன்று கட்சிகளின் மத்திய தலைவர்களும் பங்கேற்பார்கள். பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சிகளின் கொள்கைகள் ஒரேமாதிரியானவைதான். பொதுமக்களை சுரண்டவே இந்த கொள்கைகள் உதவும்.இப்போதைய காலகட்டத்துக்கு இடதுசாரி கட்சிகளின் கூட்டணி மிகவும் அவசியமான ஒன்று என்றார் சிங்.

மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி செயலர் குனால் கூறியதாவது:

ஜக்கிய ஜனதா தளம், ஆர்ஜேடி, காங்கிரஸ் கட்சிகளிடையே ஏற்பட்டுள்ளது சந்தர்ப்பவாத கூட்டணி ஆகும். ஆண்டு முழுவதும் ஒருவரை ஒருவர் தாக்கிப் பேசி வந்த இந்த கட்சிகளின் தலைவர்கள் இப்போது திடீரென கைகோர்த்துள்ளனர். காங்கிரஸ் கட்சியுடனோ, பாஜகவுடனோ இடதுசாரிகள் கூட்டணி வைக்க முடியாது. ஏழை மக்களை சுரண்டுபவை இந்த கட்சிகள். இவற்றின் சமூக-பொருளாதார கொள்கைகளும் இடதுசாரிகளின் கொள்கைகளும் மாறுபட்டவை என்றார் குனால்.

பிஹாரில் பாஜக வளர்வதைத் தடுப்பதே இடதுசாரி கட்சிகள் உருவாக்கியுள்ள கூட்டணியின் முக்கிய நோக்கம் என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் ராஜேந்திர பிரசாத் சிங். கடந்த சட்டமன்ற தேர்தலில் மூன்று இடதுசாரி கட்சிகளும் தனித்தனியாக போட்டியிட்டு மிக மோசமான தோல்வியை சந்தித்தன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் பாகல்பூர் மாவட்டத்தில் உள்ள சுல்தான்கஞ்ச் தொகுதியில் வென்றது. மக்களவைத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளத்துடன் கூட்டணி வைத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் மார்க்சிஸ்ட் கட்சியும் படுதோல்வி கண்டன.

சட்டமன்ற இடைத் தேர்தலில் இடதுசாரி கட்சிகள் கூட்டணி வைத்துள்ளது மும்முனைப் போட்டியாக மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT