இம்பால்: கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் அமைதி திரும்ப வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மணிப்பூரில் நீடிக்கும் கலவரத்தில் இதுவரை 131 பேர் உயிரிழந்துள்ளனர். 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 5,000-க்கும் மேற்பட்ட தீவைப்பு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. 65,000 பேர் வீடுகளை இழந்து அகதிகளாகி உள்ளனர். இந்த சூழலில் 2 நாட்கள் பயணமாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று முன்தினம் மணிப்பூர் சென்றார்.
அவர் நேற்று மொய்ராங் சுராசந்த்பூர் பகுதியில் உள்ள 2 நிவாரண முகாம்களுக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் தலைநகர் இம்பாலுக்கு திரும்பிய ராகுல் காந்தி, ஆளுநர் அனுசுயா உய்கியை சந்தித்துப் பேசினார்.
இதன்பிறகு நிருபர்களிடம் ராகுல் கூறியதாவது: நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருக்கும் மக்களை சந்தித்தேன். அவர்களின் வேதனைகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. வன்முறையால் எதையும் சாதிக்க முடியாது. மணிப்பூரில் அமைதி திரும்ப வேண்டும். அதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மாநிலத்தில் அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநரிடம் வலியுறுத்தினேன். நிவாரண முகாம்களில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை. அவற்றை நிவர்த்தி செய்யுமாறு ஆளுநரை கேட்டுக் கொண்டேன். இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.
அசாம் முதல்வர் பதில்: அசாம் முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான ஹிமந்த பிஸ்வா சர்மா கூறும்போது, “மணிப்பூர் பிரச்சினைக்கு ராகுல் காந்தியால் தீர்வு காண முடியாது. அவர் மணிப்பூரை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும். கலவரத்தைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இப்போதைய சூழலில் எந்தவொரு அரசியல் தலைவரும் மணிப்பூருக்கு செல்லக்கூடாது’’ என்று தெரிவித்தார்.