இந்தியா

மும்பை தாக்குதல் வழக்கு விசாரணையில் தாமதம் ஏன்?- பாக். தூதருக்கு மத்திய அரசு சம்மன்

செய்திப்பிரிவு

மும்பை தாக்குதல் வழக்கு விசாரணையை தாமதப்படுத்துவதை கண்டித்து பாகிஸ்தான் துணை தூதருக்கு மத்திய அரசு சம்மன் அனுப்பியுள்ளது.

மும்பை தாக்குதல் வழக்கை விசாரித்து வரும் பாகிஸ்தான் பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம், தொடர்ந்து 7-வது முறையாக நேற்று முன்தினம் (புதன் கிழமை) விசாரணையை ஒத்திவைத்தது.

ஜூன் 25-ல் தொடங்கவிருந்த விசாரணை, நீதிபதி விடுப்பில் சென்றதன் காரணமாக 7-வது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இந்தியாவுக்கான பாகிஸ்தான் துணை தூதருக்கு வெளியறவு அமைச்சகம் சம்மன் அனுப்பியுள்ளது. அதேவேளையில், பாகிஸ்தானில் உள்ள இந்திய துணை தூதர், பாகிஸ்தான் வெளியுறவு அலுவலகத்திற்கு நேரில் சென்று இந்தியாவின் எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறார்.

பாகிஸ்தானிலும், இந்தியாவிலும் இருநாட்டு அதிகாரிகள் மேற்கொண்ட ஆலோசனையில், வழக்கு விசாரணை நிலவரம் குறித்தும், பாகிஸ்தான் அதிகாரிகள் மேற்கொண்டு வரும் புலன்விசாரணை குறித்தும் அவ்வப்போது இந்திய தரப்புக்கு எடுத்துரைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், 2008-ல் நடந்த மும்பை தாக்குதலுக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக இருப்பதும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

2008 மும்பை பயங்கரவாத தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர், 100 பேர் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக, லஷ்கர் இ தொய்பா கமாண்டர் ஜாகிர் உர் ரெஹ்மான் லக்வி, அப்துல் வஜீத், ஹம்த் அமின் சாதிக், சாஹித் ஜமீல் ரியாஸ், ஜமீல் அகமது, அன்ஜும் ஆகிய 7 பேர் மீது இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பை மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டு, நிதியுதவி அளிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு உள்ளது.

SCROLL FOR NEXT