இந்தியா

தமிழகத்துக்கு தண்ணீர் விடுவதை எதிர்த்து கர்நாடக விவசாயிகள் போராட்டம்: கபினி அணையிலிருந்து அதிக நீர் திறப்பு

இரா.வினோத்

கர்நாடக மாநிலத்தில் பரவலாக கனமழை பெய்து வருவதால் அங்குள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹேமாவதி, ஹாரங்கி, பத்ரா உள்ளிட்ட பெரிய‌ அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. எனவே, கடந்த இரு தினங்களாக கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளில் இருந்து தமிழகத்திற்கு அதிகமாக நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதன்கிழமை மாண்டியாவில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து தமிழகத்திற்கு தண்ணீர் விட்டால், மைசூரில் உள்ள கர்நாடக நீர்ப்பாசனத்துறை அலுவலகத்தை முற்றுகையிடப்போவதாகவும் எச்சரித்துள்ளனர்.

குடகில் கொட்டும் மழை

தென்மேற்கு பருவ மழையின் காரணமாக கர்நாடக, கேரள மாநிலங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. கர்நாடக‌த்தில் குடகு, தலை காவிரி, மடிகேரி, சிக்மகளூர், சிருங்கேரி, ஷிமோகா, மங்களூர் ஆகிய இடங்களில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது.

காவிரி நீர்ப்பாசன பகுதிகளில் தொடரும் கன மழையின் காரணமாக மண்டியா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ண சாகர் அணை வேகமாக நிரம்பி வருகிறது. 124.80 அடி உயரமுள்ள அணையின் நீர் மட்டம் புதன்கிழமை 89.40 அடியாக உயர்ந்திருக்கிறது.

அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 24,579 கன அடியாக அதிகரித்திருப்பதால் அணையில் இருந்து வினாடிக்கு 8,269 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.செவ்வாய்க்கிழமை வினாடிக்கு 2,687 கன அடி நீர் மட்டுமே வெளி யேற்றப்பட்டது குறிப்பி டத்தக்கது.

பத்தாயிரம் கன அடி நீர் திறப்பு

அதேபோல கேரள மாநிலம் வயநாட்டிலும், கர்நாடக மாநிலம் மலநாடு பகுதியிலும் தொடர்ந்து கனமழை பொழிவதால் கபினி அணையில் நீர்மட்டம் ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளது. அணைக்கு வினாடிக்கு 22,000 கன அடி நீர் வந்து கொண்டிருப்பதால், வினாடிக்கு 10,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

விவசாயிகள் போராட்டம்

காவிரி நீர்ப்பாசனப் பகுதியில் அமைந்துள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய அணைகள் வேகமாக நிரம்பி வருவதால் அணையின் பாதுகாப்பை கருதி தமிழகத்திற்கு அதிகமாக தண்ணீர் திறந்துவிடப் பட்டுள்ளது. குடகு மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்தால், இந்த நீரின் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட்டதற்கு கர்நாடக மாநில விவசாய சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள் ளன. மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட‌ விவசாயிகள் மாவட்ட ஆட்சிய‌ர் அலுவலகம் அருகே புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் பங்கேற்ற மாண்டியா மாவட்ட கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் மாதே கவுடா, ‘கர்நாடக மாநிலத்தில் உள்ள எந்த அணையும் இது வரை முழுமையாக நிரம்ப வில்லை. எனவே கர்நாடக விவ சாயிகளுக்கே இன்னும் தண்ணீர் திறக்கப்படவில்லை. அதற்குள் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட வேண்டிய அவசியம் என்ன?' என கேள்வி எழுப்பினார்.

கர்நாடக விவசாயிகளின் எதிர்ப் பையும் மீறி தொடர்ந்து தமிழகத் திற்கு தண்ணீர் திறந்துவிட்டால் மைசூரில் உள்ள கர்நாடக நீர்ப்பாசனத்துறை அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

SCROLL FOR NEXT