இந்தியா

நீதிபதி மார்கண்டேய கட்ஜு புகாருக்கு முன்னாள் தலைமை நீதிபதிகள் மறுப்பு

எம்.சண்முகம்

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு கூறியுள்ள புகாரை முன்னாள் தலைமை நீதிபதிகள் ஆர்.சி.லஹோதி, கே.ஜி.பாலகிருஷ்ணன் ஆகியோர் மறுத்துள்ளனர்.

உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றவரும் பிரஸ் கவுன்சில் தலைவராகவும் உள்ள நீதிபதி மார்கண்டேய கட்ஜு நீதித்துறை ஊழல் குறித்த புகார் ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் கூறியுள்ள புகார் விவரம்:

தமிழகத்தில் நேரடியாக மாவட்ட நீதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர், மாவட்ட நீதிபதியாக இருந்த கால கட்டத்தில் தவறு செய்ததற்காக அவருக்கு எதிராக எட்டு புகார்கள் வந்தன. அந்த எட்டு புகார்களையும் சென்னை உயர் நீதிமன்ற தற்காலிக தலைமை நீதிபதியாக இருந்த ஒருவர் ஒரு அழித்துவிட்டார்.

பின்னர் அவர் சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதி யாக நியமிக்கப்பட்டார். நான் நவம்பர் 2004-ல் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றபோது அவர் அப்பதவியில் இருந்தார். அவருக்கு தமிழகத்தைச் சேர்ந்த முக்கிய அரசியல் கட்சி தலைவர் ஆதரவு இருந்தது. அந்த தலைவருக்கு இவர் மாவட்ட நீதிபதியாக இருந்தபோது ஜாமீன் வழங்கியதால் இந்த ஆதரவு என்று தெரிவித்தனர்.

நீதிபதி மீது பல ஊழல் புகார்கள் எனக்கு வந்ததால் ரகசிய விசாரணை நடத்தும் படி அப்போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ஆர்.சி. லஹோதிக்கு கடிதம் அனுப்பினேன். சில வாரங்களில் தலைமை நீதிபதியே என்னை தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது விசாரணையில் நீதிபதி மீதான புகார் உண்மை என்ற விவரம் தெரியவந்தது. மத்திய புலனாய்வுப் பிரிவு கூடுதல் ஆதாரங்களை சமர்ப்பித்துள்ளதும் தெரியவந்தது. இந்த அறிக்கை மூலம் அவரது கூடுதல் நீதிபதி பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள் முடிந்ததும் நீட்டிக்கப்படாது என்று எதிர்பார்த்தேன். ஆனால் அவருக்கு மேலும் ஓராண்டு கூடுதல் நீதிபதியாக பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது. அவருடன் வந்த மற்ற ஆறு கூடுதல் நீதிபதிகளும் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப் பட்டனர்.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் ஐந்து மூத்த நீதிபதி களால் நடைபெறும். மூன்று மூத்த நீதிபதிகள் உயர் நீதிமன்ற விவகாரங்களை கவனிப்பர். அப்போது, தலைமை நீதிபதி லஹோதி, நீதிபதிகள் ஒய்.கே.சபர்வால், ரூமாபால் ஆகி யோர் அப்போது அந்த மூன்று நீதிபதிகளாக இருந்தனர். எதிர் மறையான புலனாய்வு அறிக்கை வழங்கப்பட்டும் அவரது பதவி நீட்டிப்பை பரிந்துரைத்தனர்.

மன்மோகன் சிங்கிடம் மிரட்டல்

அப்போது மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இருந்ததால் அதில் அங்கம் வகித்த தமிழகத்தைச் சேர்ந்த முக்கிய கட்சி, அந்த நீதிபதிக்கு பதவி நீட்டிப்பு வழங்காவிட்டால் ஆதரவை விலக்கிவிடுவோம் என்று பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கிடம் மிரட்டியுள் ளது. உடனே மத்திய அமைச்சர் ஒருவர் தலைமை நீதிபதியை தொடர்பு கொண்டு நிலைமையை விளக்கியதும் அந்த நீதிபதிக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

பின்னர் தலைமை நீதிபதியாக வந்த ஒய்.கே.சபர்வால் அந்த நீதிபதிக்கு மீண்டும் ஒருமுறை பதவி நீட்டிப்பு வழங்கினார். அடுத்து வந்த தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் அந்த நீதிபதிக்கு நிரந்தர உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு வழங்கி வேறு உயர் நீதிமன்றத்துக்கு மாற்றினார். எழுத்தில் என்ன இருந்தாலும் நடைமுறையில் நீதித்துறை எப்படி செயல்படுகிறது என்பதற்காக இதைச் சொல்கிறேன். என்று மார்கண்டேய கட்ஜு கூறியுள்ளார்.

நீதித்துறை குறித்து அவர் வெளியிட்டுள்ள விமர்சனம் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. பத்து ஆண்டுகள் கழித்து இப்போது இதை தெரிவிக்க என்ன காரணம் என்றும் கேள்வி எழுந்துள்ளது.

ஆவணங்களில் உள்ளன

கட்ஜு புகார் குறித்து உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.சி.லஹோதி கூறிய போது, ‘அனைத்துமே ஆவணமாக உள்ளது. நான் என்ன செய்தேன், என்ன செய்யவில்லை என்பதற்கான காரணங்களுடன் ஆவணங்கள் உள்ளன. நான் என் வாழ்க்கையில் எந்த தவறும் செய்யவில்லை’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மற்றொரு முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், ‘நீதிபதியின் பெயரையும் அரசியல் கட்சியின் பெயரையும் குறிப் பிடாமல் பின்னாளில் உணரும் பல விஷயங்களை நம்மால் தெரிவிக்க முடியும். அந்த நீதிபதியின் நியமனத்தை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. நீதிபதி அரிஜித் பசாயத்தின் தீர்ப்பை படித்தால் உண்மை தெரியும்.

ஒரு நீதிபதி குறிப்பிட்ட அரசுடன் நெருக்கமாக இருப்பது தெரியவந்தால் அவரை அங்கிருந்து மாற்ற வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT