கோப்புப்படம் 
இந்தியா

மணிப்பூர் மாநில நிலவரம் குறித்து பிரதமர் மோடியிடம் அமித் ஷா விளக்கம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: மணிப்பூர் மாநில நிலவரம் குறித்து அமெரிக்காவிலிருந்து திரும்பிய பிரதமர் மோடியிடம், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளித்துள்ளார்.

மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி - குகி இனக் குழுக்களிடையே மோதல்கள் 2 மாதங்களாக நீடிக்கின்றன. இதில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அங்கு ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் 4 நாள் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துவிட்டுத் திரும்பிய பிரதமர் மோடியிடம் மணிப்பூர் நிலவரம் குறித்து மத்தியஉள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளித்தார்.

பிரதமர் மோடியின் வீட்டுக்கு நேற்று சென்ற அமித் ஷா, மணிப்பூரில் அமைதி திரும்ப எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

முன்னதாக மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங், நேற்று முன்தினம் டெல்லியில் அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து விளக்கம் அளித்திருந்தார். கடந்த சனிக்கிழமை நடைபெற்ற மணிப்பூர் மாநில அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் அமித் ஷா பங்கேற்றார். இதில் 18 கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டு தங்களது யோசனைகளைத் தெரிவித்தனர்.

மணிப்பூரில் அமைதி திரும்புவதற்கு உடனடியான செயல் திட்டத்தை மத்திய அரசு தொடங்கவேண்டும் என்று கட்சித் தலைவர்கள், மத்திய அமைச்சர் அமித் ஷாவை கேட்டுக் கொண்டனர்.

கார்கே கோரிக்கை: காங்கிரஸ் தலைவர் மல்லி கார்ஜுன கார்கே நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி உண்மையில் தீர்வு காண வேண்டும் என்றால், உடனடியாக முதல்வர் பிரேன் சிங்கை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள குழுக்களிடமிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டும். அனைத்து கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை மேற்கொண்டு பிரச்சினைக்கு பொதுவான தீர்வை காண வேண்டும். இவை எல்லாவற்றையும் விட முக்கியமானது, அத்தியாவசிய பொருட்கள்தான்.

தற்போது போராட்டக்காரர்கள் சாலைகளை மறித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். எனவே அத்தியாவசிய பொருட்கள் உள்ளே வருவது சவாலாக இருக்கிறது. எனவே நெடுஞ்சாலைகளை பாதுகாப்புப் படையினர் மீட்க வேண்டும்.மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வாதாரத்தை உருவாக்க வேண்டும்.

இவ்வாறு காங்கிரஸ் தலைவர்மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT