இந்தியா

கெயில் எரிவாயு விபத்து: 180 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

செய்திப்பிரிவு

கிழக்கு கோதாவரி மாவட்டம் நகரம் கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை கெயில் நிறுவன எரிவாயு கசிவு காரணமாக இதுவரை 21 பேர் பலியாகி உள்ளனர். 15-க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தால் தெலங்கானா, ஆந்திரா பகுதிகளில் 180 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

நகரம் கிராமத்தில் ஏற்பட்ட எரிவாயு கசிவின் காரணமாக இந்த கிராமம் வழியாக செல்லும் பிரதான பைப்லைன் வெடித்தது. இதனால் விஜயவாடாவில் உள்ள லான்கோ நிறுவனத்துக்கு செல்லும் எரிவாயு தடைபட்டுள்ளது. அந்த நிறுவனத்துக்கு தினமும் 0.72 மில்லியன் கியூபிக் மீட்டர் (எம்.சி.எம்.டி) எரிவாயு விநியோகம் நின்றுபோயுள்ளது. இதன் காரணமாக 140 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி தடைபட்டுள்ளது.

இதே போன்று, ஜி.வி.கே. ரிலையன்ஸ், ஆந்திர பிரதேஷ் காஸ் பவர் கம்பெனி (ஏ.பி.ஜி.பி.சி.எல்), ஸ்பெக்ட்ரம் ஆகிய 4 முக்கிய நிறுவனங்களுக்கும் எரிவாயு விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக மேலும் 40 மெகாவாட் மின் உற்பத்தி தடைபட்டுள்ளது. மொத்தம் 180 மெகாவாட் மின் உற்பத்தி குறைந்துள்ளது.

SCROLL FOR NEXT